புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்; திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் மனித சங்கிலி போராட்டம்
புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் - அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் பங்கேற்பு.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 1000க்கும் பங்கேற்றனர். ஜோதி வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டு, மகாத்மா காந்தியின் 153வது பிறந்த தினம் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. புதுச்சேரி சித்தன்குடி பகுதியில் உள்ள புதுச்சேரி காமராஜர் சாலையிலிருந்து தொடங்கும் பேரணியை ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி தொடங்கி வைத்தார்.
ஜோதி வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டு, மகாத்மா காந்தியின் 153வது பிறந்த தினம் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டபோது. pic.twitter.com/VEs4Fo0ntl
— A.Namassivayam (@ANamassivayam) October 2, 2022
இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் அமைச்சர் நமச்சிவாயம், குடிமைபொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், பாஜக மாநில தலைவர் சாமிநாதன், நியமன சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு, பாஜக ஆதரவு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து பங்கேற்றனர். காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷின் வீதி தின நகரின் முக்கிய வீதிகள் வழியாக செல்லும் பேரணி கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலை வரை சுமார் 4 கிமீ தூரம் வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அமைச்சர்கள், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உளட்பட 1000க்கும் மேற்பட்டவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
புதுச்சேரி திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்
தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்து முன்னணி அமைப்பினர், பாஜக நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சட்டவிரோத நிகழ்வுகளுக்கு பின்னால் யார் இருக்கின்றனர் என்ற காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த தொடர் அசம்பாவித சம்பவங்கள் காரணமாக தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால், மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது, சட்டம் மற்றும் ஒழுங்கில் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தமிழக காவல்துறை கவனமாக உள்ளது.
இதனால் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற இருந்த ஊர்வலம் மற்றும் கூட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் இன்று நடைபெற்ற திட்டமிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தமிழகத்தில் நடைபெறவில்லை. இதே வேளையில் புதுச்சேரி மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஊர்வலம் மற்றும் பொது கூட்டம் நடத்த எந்த தடையும் அளிக்கப்படவில்லை. இதனால் இன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தடையின்றி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மற்றும் தனியார் மண்டலத்தில் ஏற்பாடு செய்துள்ள பொது கூட்டம் நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், அமைதிப் பூங்காவாக திகழும் புதுச்சேரி மாநிலத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் மகாத்மா காந்தியின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் அவரை முன்னிறுத்தி அரசியல் செய்து, கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மதவாதத்தை எதிர்க்கும் விதமாக மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி இந்த மனித சங்கிலி மதநல்லிணக்க போராட்டம் அண்ணா சிலையில் இருந்து அண்ணா சாலை, காமராஜர் சிலை வரை நடக்கிறது. குறிப்பாக, மதவாத சக்திகளுக்கு எதிராக நடைபெறும் இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவதாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா தெரிவித்துள்ளார். இதில், மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கு பெற்றுள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த மனித சங்கிலி மதநல்லிணக்க போராட்டம் நடைபெற்ற கொண்டிருக்கும் போது அருகே காமராஜர் நினைவு நாளையொட்டி அவருக்கு சிலைக்கு மரியாதை செலுத்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி வருகை தந்தனர். அந்த சமயத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநர் மற்றும் முதல்வரை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டதால், காவல் துறையினர் போராட்ட காரர்களை அப்புறப்படுத்தினர். சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், திமுக, காங்கிரஸ், விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சார்ந்த 1000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.