கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க களத்தில் இறங்கிய திமுக எம்எல்ஏ - மளிகை கடையில் சிக்கிய சாராயம்
மளிக்கைக்கடையில் பாட்டில் சாராயம், மற்றொரு வீட்டில் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு கடத்தப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தால் 58 பேர் உயிரிழந்த நிலையில், புதுச்சேரியில் பள்ளி எதிரே மளிகை கடை மற்றும் வீடுகளில் கள்ளச்சாராயம் பாக்கெட் மற்றும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்த நபர்களை திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத் கையும் களவுமாக பிடித்து காவல்துறையுடம் ஒப்படைத்தார்.
கள்ளக்குறிச்சியி விஷச்சாராயம் அருந்தியதில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள். இந்த சம்பவம் தொடர்பாக 14 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கடத்தி சென்ற புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தனது தொகுதி முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் தனக்கு தகவல் அளிக்க வேண்டுமென்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதன்படி வேல்ராம்பட்டு மாரியம்மன் கோவில் வீதியில் பள்ளிக்கு எதிரே மளிகை கடையில் கள்ளச்சாராயம் விற்பது போன்ற வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் சம்பத் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் சாலைப்பணிகளை ஆய்வு செய்வதாகக் குறிப்பிட்டு, போலீசாருடன் வேலாரம்பட்டு ஏரிக்கு செல்லும் மாரியம்மன் கோயில் தெருவுக்கு சென்றார்.
மளிக்கைக்கடையில் சாராய விற்பனை அமோகம்
அங்கு ஒரு வீட்டையொட்டிய பகுதியில் மூட்டையில் கள்ளச்சாராயப் பாக்கெட்டுகள் இருந்தன. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் அருந்தும் இடமும் அங்கு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்த மளிக்கைக்கடையில் பாட்டில் சாராயம், மற்றொரு வீட்டில் சாராய பாக்கெட்டுகள் இருந்தது. அவற்றையும் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் முன்னிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த சக்கரவர்த்தியை போலீசார் கையும்களவுமாக பிடித்தனர். மேலும் கடைக்கு வெளியே இருந்த இருசக்கர வாகனத்தின் இருக்கைப் பகுதியை தூக்கி பார்த்தால் அங்கு சாராய பாட்டில்கள் இருந்தன.
இதையடுத்து சுமார் 50,000 மதிப்புள்ள கள்ளச்சாராய பாக்கெட் மற்றும் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து சக்கரவர்த்தி மற்றும் அவரது மகன் ராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.