புதுச்சேரி: 2023-24ம் ஆண்டில் ரூ. 11 ஆயிரத்து 600 கோடி பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்...!
புதுச்சேரி 2023-24ம் ஆண்டுக்கு, 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரி : வரும் 2023-24ம் ஆண்டுக்கு, 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோப்புக்கு மத்திய உள்துறை ஒப்புதல் அளித்து, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிதி அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், பட்ஜெட் தாக்கலுக்கு ஏற்பட்டு இருந்த சிக்கல் நீங்கியது. வரும் 13ம் தேதியன்று, முதல்வர் ரங்கசாமி, திட்டமிட்டப்படி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதையடுத்து, பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் தரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டதொடர், துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் 9 ம் தேதி நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசு அறிவுறுத்தல்படி, இந்த நடைமுறையை மாற்றி இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு திட்டமிட்டது.
இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் அண்மையில் கூடியது. இதற்கான திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த பட்ஜெட்டை விட ரூ. 1000 கோடி அதிகம். வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்படி மார்ச் 9ம் தேதி காலை 9. 45 மணிக்கு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடரில் உரையாற்ற, ஆளுநர் மாளிகையில் இருந்து புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சென்றார் தமிழிசை செளந்தரராஜன். அதையடுத்து அவருக்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை தரப்பட்டது. பேரவைத்தலைவர் செல்வம் ஆளுநரை வரவேற்று மைய மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.
அதையடுத்து தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அங்கு பேரவைத்தலைவர் இருக்கையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை அமர்ந்தார். அவர் அருகே பேரவைத்தலைவர் செல்வம் அமர்ந்தார். பின்னர் பாரதியாரின் பாடல் வரிகளை வாசித்து அப்போது பேசிய அவர், “இந்தியா ஜி20 மாநாட்டுக்கு தலைமையேற்று நாடு முழுவதும் 200 கூட்டங்கள் நடத்த முடிவெடுத்து, அதில் முதல் கூட்டம் புதுச்சேரியில் நடந்தது நமக்கெல்லாம் பெருமை. புதுச்சேரி அரசு, நிதி நிர்வாகத்தை சிறப்பாக கையாண்டதால் ரூ. 1400 கோடி நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.
ரூ. 39,019 கோடி நடப்பு விலை மதிப்பிடப்பட்டுள்ளது. இது 4.0 விழுக்காடு அதிகம். மேலும் புதுச்சேரியில் உள்ளவர்களின் தனிநபர் வருமானம் 2021-22ல் ரூ. 2.14 லட்சத்திலிருந்து 22-23 ல் ரூ.2.22 லட்சமாக உயர்ந்துள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில இடுபொருள் தரப்படுகிறது. கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது என தன் உரையில் பேசினார். ஆளுநர் பேரவையில் உரையாற்றியபோது, ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ நேரு எழுந்து நின்று கையில் இருந்த போஸ்டரை காண்பித்தார். அதில், மத்திய அரசே புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநர் நியமித்துடு, வேண்டாம் வேண்டாம் இரவல் ஆளுநர் வேண்டாம் என்று எழுதியிருந்தது. அதை பார்த்த பேரவைத்தலைவர் செல்வம் அமரக்கூறினார். ஆனால் அவர் நெடுநேரம் நின்றிருந்தார். பின்னர் பேரவையிலிருந்து எம்எல்ஏ நேரு வெளிநடப்பு செய்தார். இந்தாண்டு ஆளுநர் உரை முழுவதும் பாரதியாரின் பாடல் வரிகள் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வரும் 2023-24ம் ஆண்டுக்கு, 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.