பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி விரைவில் வழங்கப்படும் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில் மாணவர்கள் நாள் விழா காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்று பல்வேறு போட்டிகள், அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:-
நாட்டை வரும்காலத்தில் வல்லரசாக்கப்போவது நீங்கள்தான். இதற்காகத்தான் மத்திய அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை செயல்படுத்துகிறது. புதிய கல்வி கொள்கையை கொண்டுவந்துள்ளனர். புதுச்சேரி அரசும் மாணவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரியில் பள்ளிகள் இல்லாத பகுதிகளே இல்லை. தனியார் பங்களிப்பும் உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்தியுள்ளோம். ஸ்மார்ட் வகுப்புகளையும் கொண்டு வந்துள்ளோம்.
உயர்கல்வியில் புதுவையில் கிடைக்காத கல்வியே இல்லை. ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் கூட மருத்துவர்களாக உருவாகியுள்ளனர். அவர்கள் வீட்டு திருமணத்துக்கு செல்லும் போதுதான் கொண்டுவந்த திட்டத்தின் பலனை நேரில் காணமுடிகிறது. நினைத்த கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத போது மாணவர்கள் சோர்வடையக்கூடாது. கிடைத்த கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தி படித்து முன்னேற வேண்டும். வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசு பணிக்காக மட்டும் கல்வி இல்லை. அறிவை வளர்த்துக் கொள்ளவும் கல்வி தேவை. நிர்வாக பதவிகளில் தற்போது உள்ள பலர் கலை கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள்தான். கலை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நிர்வாக பதவிக்கு தங்களை தயார்படுத்த வேண்டும். ஒரே சிந்தனையோடு மாணவர்கள் படிக்க வேண்டும். தங்களின் பள்ளிக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும். நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் அரசு செயல்படுத்தும். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க உள்ளோம். 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மடிக்கணினி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இணை இயக்குனர் சிவகாமி வரவேற்றார். செல்வகணபதி எம்.பி. உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.