இனி ஆன்லைன் மூலம் ஏலம்: புதுச்சேரி புதிய பேருந்து நிலையக் கடைகளை கைப்பற்றப்போவது யார்?
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கடைகளை ஏலம் விடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது!

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கடைகளை ஏலம் விடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஏற்கனவே அங்கு கடை நடத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
மின்னணு ஏலம் (e-Auction) அறிவிப்பு
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கடைகளை ஏலம் விடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது, அதில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மொத்தம் 31 கடைகள், 2 பழச்சாறு நிலையங்கள் மற்றும் ஒரு உணவகம் ஆகியவற்றிற்கு மின்னணு ஏலம் (e-Auction) மூலம் பொது ஏலம் விடப்படுகிறது. வெளிப்படையான முறையில் இந்த ஏல நடைமுறைகள் நடைபெறவுள்ளன.
முன்னாள் கடைதாரர்களுக்கு முன்னுரிமை
பேருந்து நிலையம் இடிக்கப்படுவதற்கு முன்பு அங்கு முறையாக நகராட்சி உரிமம் பெற்று கடை நடத்தி வந்த 16 நபர்களுக்கு (15 கடைகள் + 1 உணவகம்) முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக நகராட்சி வகுத்துள்ள நடைமுறைகள் பின்வருமாறு:
குலுக்கல் முறை: மின்னணு ஏலம் முடிந்த பிறகு, தகுதியுள்ள 16 முன்னாள் கடைதாரர்களும் நகராட்சி அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள். அங்கு குலுக்கல் முறையில் (Lot System) அவர்களின் முன்னுரிமை வரிசை (Priority Order) தீர்மானிக்கப்படும்.
கடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை: இந்த வரிசைப்படி, ஒவ்வொரு முன்னாள் கடைதாரரும் ஏலத்தில் விடப்பட்ட கடைகளில் தங்களுக்கு விருப்பமான ஒரு கடையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஏலத் தொகை நிபந்தனை: அவர்கள் தேர்ந்தெடுத்த கடைக்கு, பொது ஏலத்தில் கேட்கப்பட்ட அதிகபட்ச ஏலத்தொகையை (Highest Bid) செலுத்தத் தயாராக இருந்தால், அந்த கடை அவருக்கே ஒதுக்கப்படும்.
நிபந்தனைகளும் காலக்கெடுவும்
ஒதுக்கீடு பெற்றவர்கள் உடனடியாக உறுதிமொழிப் பத்திரம் (Undertaking) அளிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட 6 மாத உரிமக் கட்டணத்தை முன்தொகையாகவும், மேலும் 6 மாதக் கட்டணத்தைச் பிணைப்புத் தொகையாகவும் (Security Deposit) என மொத்தம் ஒரு வருடத் தொகையை 2 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, ஏலத்தில் அதிகத் தொகை கேட்டவருக்கு அந்தக் கடை வழங்கப்படும். முன்னாள் கடைதாரர்கள் கடைகளை எடுத்துக்கொண்டால், ஏலத்தில் வெற்றி பெற்ற அசல் ஏலதாரர்களின் முன்வைப்புத் தொகை (EMD) உடனடியாகத் திருப்பி வழங்கப்படும். அவர்கள் எவ்வித நஷ்டஈடும் கோர முடியாது.
மீதமுள்ள கடைகள் ஒதுக்கீடு
முன்னாள் கடைதாரர்களுக்கான 16 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, மீதமுள்ள 18 கடைகள் (16 கடைகள் + 2 பழச்சாறு நிலையங்கள்) ஏலத்தில் அதிகபட்சத் தொகை கேட்டவர்களுக்கு நேரடியாக ஒதுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாகக் காத்திருந்த பழைய கடைதாரர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு நிம்மதியை அளித்துள்ள நிலையில், ஏல நடைமுறைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.





















