Crime : ஆண்மையை பெருக்க நினைத்து வேட்டையாடப்படும் கவுதாரிகள்.. வனத்துறை விடுத்த எச்சரிக்கை
காடுகளில் வாழும் கவுதாரியை சாப்பிட்டால் ஆண்மை, உடல் வலிமை பெருகும் என்ற வதந்தியால், விழுப்புரம் மாவட்டத்தில் கவுதாரிகள் வேட்டை அதிகரித்துள்ளது.
சமூக வலைதளங்களின் வளர்ச்சியை தொடர்ந்து, வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் பல்வேறு துறைசார்ந்த ஆதாரமற்ற பல வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக உடல் நலனை பாதுகாக்க, அழகு பெற மற்றும் ஆண்மைக்கு என தமிழ் மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவம் என உறுதி செய்யப்படாத பல்வேறு தகவல்களும் பரப்பப்படுகின்றன.
சமீபத்தில், செங்காந்தள் கிழங்கை சாப்பிட்டால் உடல் பளபளவென மாறும் என்ற, வாட்ஸ்-அப் செய்தியை நம்பி அதனை உண்ட திருப்பூரை சேர்ந்த இளைஞர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காடுகளில் வாழும் கவுதாரியை பிடித்து சாப்பிட்டால் ஆண்மை, உடல் வலிமை பெருகும் என்ற வதந்தி விழுப்புரத்தில் அதிகளவில் நம்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில், மான், காட்டுப்பன்றிகள், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் கடந்த காலங்களில் அதிகளிவில் வேட்டையாடப்பட்டன. வனத்துறையின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக தற்போது வனவிலங்குகளை வேட்டையாடுவது அப்பகுதியில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது புதியதாக வனவிலங்கு பட்டியலில் உள்ள கவுதாரியை வேட்டையாடுவது, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் அதிகரித்துள்ளது.
கவுதாரி இறைச்சியை சாப்பிட்டால் ஆண்மை மற்றும் உடல் வலிமை அதிகரிப்பதோடு, நெஞ்சு சளி குறையும் எனவும் அவற்றை வேட்டையாடும் கும்பல் பொதுமக்களிடையே பல்வேறு தகவல்களை பரப்பியுள்ளது. இதனை நம்பி பொதுமக்கள், ஒரு ஜோடி கவுதாரியை ரூ.500 முதல் ரூ.850 வரையில் விலை கொடுத்து வாங்கிச் செல்வதாகவும் பல்வேறு புகார்கள் வனத்துறையிடம் குவிந்துள்ளன.
இனப்பெருக்க காலத்தில் ஆண் கவுதாரியின் இக்கூவல் பிற கவுதாரிகளை அழைக்கக்கூடியதாக இருப்பதால், அவற்றைப் பிடிக்க உதவும் கவர்பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. கவுதாரி கூவியவுடன் எங்கோ இருக்கும் மற்ற கவுதாரிகள் சத்தம் வரும் திசை நோக்கி பறந்து தரையை நோக்கி தவழ்ந்து வரும்போது வேட்டையாடுபவர்கள் வலையை விரித்து வைத்து அவற்றைப் பெருமளவில் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கவுதாரி பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்பவர்கள் மட்டுமின்றி, அதனை வாங்கி உண்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஏதாவது வதந்திகளை கிளப்பி பறவைகளை பிடித்து வந்து சிலர் விற்பனை செய்வதாகவும், வளர்ப்பு பறவைகளை மட்டும் அடித்து சாப்பிட மனிதர்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. காடுகளில் வாழும் பறவை, மிருகங்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உண்டு எனவும், கவுதாரி உள்ளிட்ட வனவாழ் உயிரினங்களை வேட்டையாடுபவர்களை பொதுமக்கள் அடையாளம் காட்டினால் மட்டுமே, வேட்டையாடுதலை முழுமையாக தவிர்க்க முடியும் எனவும், வனத்துறை எச்சரித்துள்ளது.
மேலும், இதுபோன்ற ஆதாரப்பூர்வமற்ற சமூக வலைதள மருத்துவ குறிப்புகளை நம்பி, இறைச்சி, தாவரங்களின் வேர் மற்றும் கிழங்கு ஆகியவற்றை உண்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் எனவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.