2 சட்டமன்றத் தொகுதி கூட ஜெயிக்க முடியாது - அன்புமணிக்கு பதிலடி தந்த அமைச்சர் பொன்முடி
தமிழகத்தின் பெயரை சொல்வதற்கு கூட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திறமை இல்லை.
விழுப்புரம் : இந்தியா கூட்டணியின் வழிகாட்டியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுவதாகவும், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என முதன் முதலில் தெரிவித்த ஸ்டாலினை பின்பற்றி 9 மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி முன்னாள் எம் பியும் மாவட்ட செயலாளருமான கெளதமசிகாமணி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் பேசிய பொன்முடி,
தமிழக முதல்வர் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். ஆனால் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒன்றிய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து இருக்கிறது. தமிழகம் என்கின்ற பெயர் சொல்வது கூட அவர்களுக்கு மனம் இல்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் படித்தவர், இவர் தமிழகத்தின் பெயரை சொல்வதற்கு கூட அவர்களுக்கு திறமை இல்லை என்று சொன்னால், பாஜக அரசு தமிழகத்தை எந்த அளவில் புறக்கணிக்கிறது என்பது தெரிகிறது. அந்த அரசுக்கு நாம் பாட புகட்ட வேண்டும்.
இன்னும் சில பேர் 25 எம்பி சீட் இருந்திருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணி இருப்போம் என கூறுகிறார்கள். இனி 25 நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமில்லை இரண்டு சட்டமன்றத் தொகுதி கூட ஜெயிக்க முடியாது.
இந்தியா கூட்டணியின் வழிகாட்டியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என முதன் முதலில் தெரிவித்த ஸ்டாலினை பின்பற்றி 9 மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார். நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு 2026ல் அவர்களுடன் இருப்பவர்களுக்கு சேர்த்து பாடம் புகட்ட வேண்டுமென பொன்முடி வலியுறுத்தினார்.