Kallakurichi: பேருந்து படியில் பயணம்...நொடியில் மரணம் .... கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு!
கள்ளக்குறிச்சி: பேருந்து படியில் பயணம் செய்த கல்லூரி மாணவன் தவறி விழுந்ததில் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சியில் தனியார் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவன் தவறி கீழே விழுந்ததில் பின்சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மகன் அசோக் வயது 19, இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனது ஊரிலிருந்து தனியார் பேருந்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்ததார். அப்போது பேருந்து படியில் நின்று கொண்டு பயணம் செய்த மாணவன், எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பின்பக்கா சக்கரத்தில் அடிபட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் உறவினர்கள் அதிக அளவு கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கல்வராயன்மலை அடிவாரப்பகுதியான மூலக்காடு, புதுப்பட்டு, புதூர், லக்கிநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பெரும்பாலும் கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் அரசு பஸ் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் சேராப்பட்டு பகுதியில் இருந்து சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சிக்கு காலை நேரத்தில் ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை தவிர விவசாயிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அதில் தான் பயணம் செய்வதால், அந்த பஸ்சில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் வேறு வழியின்றி பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.