கள்ளக்குறிச்சி: திடீரென கவிழ்ந்த மாரியம்மன் தேர் ; விபத்தில் சிக்கிய 3 பேர் கவலைக்கிடம்
சங்கராபுரம் அருகே தேர் திருவிழா நிகழ்ச்சியில் திருத்தேர் பக்கவாட்டு பகுதியில் சாய்ந்த விபத்தில் 3 பேர் படுகாயம்.
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே தேர் திருவிழா நிகழ்ச்சியில் திருத்தேர் பக்கவாட்டு பகுதியில் சாய்ந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சங்கராபுரம் அருகே தேர் கவிழ்ந்து விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மகா மாரியம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள், பாரதம் படித்தல், சக்தி கரம் அழைத்தல், பொங்கல் வைத்தல், கூழ் வார்த்தல், காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாணம், காளி கோட்டை இடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேர் கவிழ்ந்து விபத்து
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு பூஜை செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று தெற்கு தெரு மேட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் திடீரென பக்கவாட்டு பகுதியில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
விபத்தில் சிக்கிய ராமச்சந்திரன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இரண்டு பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.