Fengal Cyclone : கடற்கரையில் ஓய்வெடுக்கும் படகுகள்.. தரைக்காற்றால் வெளுத்து வாங்கும் ஃபெங்கல் புயல்
விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மரக்காணம் பகுதி மீனவர்கள் படகுகளை மேடான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
விழுப்புரம்: ஃபெங்கல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மரக்காணம் பகுதி மீனவர்கள் படகுகளை மேடான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தரைக்காற்று வீசி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள், மீனவா்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 5வது நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மரக்காணத்தில் 11 சென்டி மீட்டா் மழை பெய்தது. மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட பகுதிகளில் 3-ஆவது நாளாக இன்று கடல் சீற்றமாக காணப்படுகிறது.
மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தாழங்காடு, கைப்பாணிகுப்பம், எக்கியர்குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம், நடுக்குப்பம் உள்பட 19 மீனவ கிராம மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு சென்று மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன் வளத்துறை தெரிவித்துள்ளது . மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் பைபர் படகு, வலை, மோட்டார் உள்ளிட்ட பொருட்களை கடற்கரையில் இருந்து மேடான பகுதிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது. இதனால் 19 மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் தங்கள் படகுகள் மீன்பிடி சாதனங்களை மேடான பகுதியில் வைத்துள்ளனர். வழக்கத்தை விட இன்று கடல் அலையின் சீற்றம் அதிகரித்துள்ளது. மீனவர்கள் கடந்த ஐந்து நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மரக்காணம், கோட்டக்குப்பம், திண்டிவனம் மீன் மார்க் கெட்டுகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
நெருங்கும் புயல்; 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
90 கி.மீ. வேகத்தில் காற்று
புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Rain News LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
சட்டென்று மாறிய புயல் நிலை
நேற்று (நவ.28) மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, கரையை நெருங்கும்போது வலுவிழந்து, மீண்டும் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. எனினும் பிறகு நேற்று மாலை புயல் உருவாகாது என்று வானிலை மையம் சார்பில் கணிக்கப்பட்டிருந்தது.
பின்பு இன்று காலை நிலவரப்படி இந்த தாழ்வு மண்டலமானது அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இந்த நிலையில், சென்னை வானிலை மையம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
வட கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.