சி.வி.சண்முகம் எழுதியதை போன்ற போலி அறிக்கை - விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, எம்பி சி.வி.சண்முகம் எழுதியதை போன்ற பொய்யான அறிக்கை தயார் செய்தவர் மீது நடவடிக்கைக் கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

விழுப்புரம்: விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரின் செயல்பாடுகள் வெற்றியை பாதிப்பது போன்று சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியது போன்ற போலியான கடிதத்தினை பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் புகாரளித்தனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தலைவர்கள் பிரச்சாரத்தை நேற்று முடித்து உள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் பாக்கியராஜ் போட்டியிடுகிறார். இவர் போட்டியிடுவதில் தனக்கு விருப்பமில்லை என்றும், தன்னை கேட்காமல் வேட்பாளர் அறிவிக்கபட்டுள்ளதாகவும், இதனால் பிரச்சாரங்கள் சிறுமைப்படுத்தி கழகத்திற்கு மாறாக வேட்பாளர் செயல்படுவதாகவும், கல்வி தகுதியை தவறாக பயன்படுத்தி வெற்றி பாதிப்பது போல் போலியான அறிக்கையை மர்ம நபர்கள் தயார் செய்து சமூக வலைதளங்களில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் அதிமுக பொதுச்செயலாளருக்கு கடிதமாக அனுப்பியது போன்று பரப்பி வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் வேண்டுமென்று போலியான கடித்தத்தினை பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அதிமுக வழக்கறிஞர் ராதிகா, செந்தில், தமிழரசன் ஆகியோர் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தேர்தலுக்காக திட்டமிட்டு பரப்போரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.






















