தேமுதிகவுக்கு பயமா...? விஜய்யை டார்கெட் செய்த விஜய பிரபாகரன்
அதிமுகவிற்கும் பாஜக-விற்கும் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இதில் தேமுதிக எங்கு வருகின்றது? என விஜயபிரபாகரன் கேள்வி எழுப்பு உள்ளார்.

விழுப்புரம்: புதியதாக கட்சி ஆரம்பிப்பவர்களை கண்டு பயப்படுபவர்கள் அல்ல தேமுதிகவினர் என்றும் தேர்தல் இன்னும் ஒரு வருட காலம் இருப்பதால் கூட்டணி குறித்து நாங்கள் இப்பொழுது முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என திண்டிவனத்தில் விஜய பிரபாகரன் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆத்தூரில் மறைந்த விஜயகாந்த்தின் உதவியாளர் சின்ன குமார் என்பவரது குழந்தைகளின் காதணி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வருகை தந்த விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுக்க பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய விஜய பிரபாகரன், எப்பொழுதும் தேர்தல் நேரங்களில் தேமுதிக குறித்த வதந்திகளும்,ச்பொய் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். இதே போன்று அதிமுக- பாஜக கூட்டணி உருவாகியுள்ள நிலையில், தேமுதிகவிற்கு சிங்கிள் டிஜிட் சீட்டுகள் வழங்கப்பட உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவிற்கும் பாஜக-விற்கும் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இதில் தேமுதிக எங்கு வருகின்றது? மக்கள் மனதில் தேவையற்ற ஸ்லோ பாய்சன் போன்று தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதை பார்த்தால் தேமுதிகவை பார்த்து அனைவரும் அச்சப்படுவது போன்று உள்ளது என்று கூறினார்.
மேலும் அவர் பேசும் பொழுது, எங்களுடைய மதிப்பும், மரியாதையும், தேமுதிக நிர்வாகிகளுடைய உழைப்பும் மக்களுக்கு தெரியும். தேர்தல் இன்னும் ஒரு வருட காலம் இருப்பதால் கூட்டணி குறித்து நாங்கள் இப்பொழுது முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை . எங்களுக்கு சிங்கிள் டிஜிட் சீட்டா அல்லது டபுள் டிஜிட் சீட்டா என்பது எங்கள் தலைவர்களும், நாங்கள் கூட்டணி வைக்கும் கட்சி தலைவர்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. இதனை அரசியல் விமர்சனங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று காட்டமாக தெரிவித்தார்.

