உரிய காலத்திற்குள் திட்டங்களை முடிக்க வேண்டும் - துணை முதல்வர் உதயநிதி உத்தரவு
அதிகாரிகள் பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விரைவாக பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை உரிய காலத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக விழுப்புரத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார்.
துணை முதல்வர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட வரும் திட்டங்களை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்பு செயலாக்கத் திட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளை வரவழைத்து அனைத்து துறை அரசு அலுவலர்கள் அழைத்து ஆய்வு கூட்டத்தை நடத்தினோம். அரசின் திட்டங்களில் எவ்வாறு, எப்படி செயல்படுத்தப்பட்டுள்ளன எந்த திட்டங்களில் தொய்வு உள்ளது, கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெற்றுள்ள பணிகள் குறித்தும் எப்போது நிறைவடையும் என்பது குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆய்வு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாரிகள் பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விரைவாக பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துணை முதல்வர் திடீர் ஆய்வு
இன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார். ஆய்வு கூட்டத்திற்கு முன்பாக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகேயுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு முன்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்து ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் வாயிலில் நீண்ட நாட்களாக கட்டிடத்தின் மேல் இருந்த வளர்ந்த செடிகள், புல்களை ஊழியர்களை கொண்டு அவசர அவசரமாக அகற்றினர்.
பாத்ரூம் ஏன் இவ்வளவு சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது? துணை முதல்வர் கோபம்!
அதனை தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பஞ்சு, நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யும் இடங்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் பயன்படுத்த கூடிய கழிவறை சுத்தமாக உள்ளதா என ஆய்வு செய்த போது கழிவறைகள் சுத்தமில்லாமலும் பராமரிக்க படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒழுங்கு முறை விற்பனை கூட செயலாளர் சந்துருவிடம் பாத்ரூமில் ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள் ஏன் சுத்தம் செய்யவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார் . உடனடியாக இதனை எல்லாம் சரி செய்ய வேண்டும் என கடிந்து கொண்டார். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரும் விவசாயிகளுக்கு ஓய்வு வரை தூய்மையாக இருக்க வேண்டும் எனவும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.