'பெண்கள் கருவுறுதல் பாதிப்பு': பனையபுரத்தில் 'ஆபத்தான' டவர்! - த.வெ.க.வின் அதிரடி முற்றுகைப் போராட்டம்!
விழுப்புரம்: பனையபுரத்தில் புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் டவர் அமைக்கும் இடத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள பனையபுரத்தில் புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் (த.வெ.க) டவர் அமைக்கும் இடத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.
விக்கிரவாண்டியில் தவெக ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பனையபுரத்தில் புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் (த.வெ.க) 50க்கும் மேற்பட்டோர் புதிய செல்போன் டவர் அமைக்கும் இடத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டவர் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு
பனையபுரம் கிராமத்தில் ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு செல்போன் டவர் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதே பகுதியில் மற்றொரு ஏர்டெல் டவர் அமைக்கும் பணியை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய டவர் அமைவதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அவர்கள் ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும், டவர் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
த.வெ.க.வினர் போராட்டம்
பொதுமக்களின் புகாரைப் பொருட்படுத்தாமல் டவர் அமைக்கும் பணி தொடர்ந்ததால், அப்பணியை நிறுத்தக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டத்தில் குதித்தனர். த.வெ.க.வின் தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமையில் திரண்ட கழகத்தினர், பனையபுரத்தில் டவர் அமைக்கும் இடத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களின் கருவுறுதல் பாதிப்பு குறித்த குற்றச்சாட்டு
ஏற்கனவே அமைக்கப்பட்ட டவர் காரணமாக பெண்கள் கருவுறுதலில் பாதிப்பு ஏற்படுவதாவும் பறவை இனங்கள் அழிந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க.வினர் குற்றம்சாட்டினர். புதிய டவர் அமைந்தால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
போலீசாரின் பேச்சுவார்த்தை
சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டவர் அமைக்கும் பணியை நிரந்தரமாக நிறுத்த வேண்டுமென்றால், மீண்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையாக மனு அளிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்ட த.வெ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.





















