திமுக கூட்டணியில் இருந்து கூட்டணி கட்சிகள் எப்போது வெளியேறலாம் என பார்க்கிறார்கள் - சி.வி. சண்முகம்
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்த பிறகு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் : சொத்துவரி மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் மனித சங்கிலி போராட்டம், திமுக கூட்டணியில் இருந்து அதன் கூட்டணி கட்சிகள் எப்போது வெளியேறலாம் என நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
சொத்து வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலக முன்பாக மனித சங்கிலி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற மனித சங்கிலியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கலந்துக்கொண்டு கோரிக்கை பதாகைகயை ஏந்தி கண்டன முழக்கம் எழுப்பினார். திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் தொடங்கி காந்தி சிலை வரை கோரிக்கை பதாகை ஏந்தி ஏராளமான அதிமுகவினர் மனித சங்கலியில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முதலமைச்சர் சி.வி.சண்முகம்.
தமிழகத்தில் கோபாலபுரம் ஆட்சி நடைபெற்று வருகிறது. நிர்வாகத்தை பற்றியும், மக்களைப் பற்றிய துளியும் சிந்தனையில்லாத ஆட்சி. திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்றாண்டு கால ஆட்சியில் அனைத்து விலைவாசிகளும், வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதான் ஸ்டாலின் சொல்லும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. திமுக அரசு மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டாலின் அரசு வரி மேல் வரி போட்டு மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.
நிர்வாக சீர்கேட்டுக்கு ஒரு உதாரணமாக சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் பாதுக்காப்பு வசதி, போக்குவரத்து வசதி, குடிநீர், கழிவு நீர் வசதி செய்யாததால் ஏற்பட்ட குளறுபடியால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில் அது பற்றி கவலைப்படாமல் ஸ்டாலின் பூங்காவை திறந்து வைக்கிறார்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்த பிறகு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேற அதன் கூட்டம் கட்சிகள் நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம், விமான சாகச நிகழ்ச்சி பார்க்க சென்று உயிரிழந்தால் 5 லட்சம். திமுக அரசு மக்கள் மீது அக்கறை கொண்டு உயர்த்தப்பட்ட வரிகளை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.