மேலும் அறிய
Advertisement
பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, திருமணத்துக்கு வரதட்சணை கேட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
பிரசன்ன சரவணன் அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கூறினார். இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டதில், அந்த குழந்தை பிரசன்ன சரவணனுக்கு பிறந்தது உறுதியானது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசன்ன சரவணன் (29). பி.ஏ. படித்துள்ள இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் சட்டக்கல்லூரியிலும் படித்து வந்தார். இதற்கிடையே பண்ருட்டி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண், கடந்த 2016-ம் ஆண்டு மேல்குமாரமங்கலத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து பி.எட். படித்து வந்தார். அப்போது பிரசன்ன சரவணனுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது.
இதற்கிடையே பிரசன்ன சரவணன், அந்த இளம்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து சென்று திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண், அவரது வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர், தங்கள் மூத்த மகனுக்கு திருமணம் நடந்த பிறகு, பிரசன்ன சரவணனுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறினர். இதை நம்பிய இளம்பெண், அங்கிருந்து சென்று விட்டார். இதற்கிடையே இளம்பெண் கர்ப்பமானார். இதையடுத்து அந்த இளம்பெண் தனது உறவினர்களுடன் பிரசன்ன சரவணனின் வீட்டுக்கு சென்று திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அப்போது பக்கிரி, அமுதா, பிரசன்ன சரவணன் ஆகியோர் 30 பவுன் நகை, கார் உள்ளிட்டவை வரதட்சணையாக கொடுத்தால் தான் திருமணம் செய்து வைப்போம் என்று கூறி, இளம்பெண்ணை திட்டி அனுப்பினர்.
இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பிரசன்ன சரவணன், அவருக்கு உடந்தையாக இருந்த பக்கிரி, அமுதா ஆகியோரை கைது செய்து, கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, கடந்த 2017- ம் ஆண்டு அந்த இளம்பெண்ணுக்கு, அழகான பெண் குழந்தை பிறந்தது. அப்போது விசாரணையின் போது, பிரசன்ன சரவணன் அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கூறினார். இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டதில், அந்த குழந்தை பிரசன்ன சரவணனுக்கு பிறந்தது உறுதியானது.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட பிரசன்ன சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அபராத தொகையில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். மேலும் பக்கிரி, அமுதா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் தனசேகர் (வயது 29), கூலி தொழிலாளி. கடந்த 20.1.2019 அன்று அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி, தனசேகர் வீட்டின் அருகில் நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். இதை பார்த்த தனசேகர், அந்த சிறுமியை நைசாக தனது வீட்டுக்கு அழைத்து சென்று, அவளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், தனசேகர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை நல வாழ்வு நிதியில் இருந்து 5 லட்சம் இழப்பீடாக 30 நாட்களுக்குள் வழங்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion