அதிரடி திட்டங்களை அறிவித்த முதல்வர் ; 'நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது' என மக்கள் மகிழ்ச்சி
நமக்கு நிதி ஒன்றுதான் தடையே தவிர, வேறு எந்தத் தடையும் கிடையாது. நிதி இல்லை என்று புலம்பிக்கொண்டு இருக்காமல், மக்கள் குறைகளை நீக்கிட, அதை நீக்கி, நிறைவேற்றுகின்ற அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது.

விழுப்புரத்தில் களஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை, விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் நடந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்க திறப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ரூ.133 கோடி மதிப்பிலான 116 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ரூ.425 கோடியிலான 231 முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.324 கோடியில் 35,003 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய முதல்வர், இந்த மாவட்டத்தை முன்னேற்ற நாம் ஏராளமான பணிகளை செய்திருக்கிறோம். நேற்றிரவு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட உயர் அதிகாரிகளோடு நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பணிகள், நடைபெறக்கூடிய பணிகள், இன்னும் நிறைவேற்றப்படக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு செய்தோம். இந்த மாவட்டத்திற்கான தேவைகளையும் நான் கேட்டுக் தெரிந்து கொண்டேன். அதையொட்டி இந்த மாவட்டத்திற்கான 11 புதிய அறிவிப்புகளை நான் இங்கே வெளியிட விரும்புகிறேன்…
11 புதிய அறிவிப்பு
நந்தன் கால்வாய் திட்டம் : சாத்தனூர் அணையின் உபரி நீரை நந்தன் கால்வாயில் இணைப்பதற்கான ஊட்டு கால்வாய் அமைக்கவேண்டும் என்று செஞ்சி, விக்கிரவாண்டி, விழுப்புரம், வானூர், பென்னாத்தூர் மற்றும் திருவண்ணாமலை பகுதி உழவர் பெருமக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 304 கோடி ரூபாய் செலவில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்.
விழுப்புரம் வட்டத்தில், கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, வெள்ளத்தால் சேதம் அடைந்த, தளவானூர் அணைக்கட்டு 84 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே, வழுதாவூர் அருகில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும்.
காணை மற்றும் கோலியனூர் ஒன்றியங்களில் இருக்கும் 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 35 கோடி ரூபாய் செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
விக்கிரவாண்டி பேரூராட்சியில் இருக்கும் கக்கன் நகரில், ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில், பல்நோக்கு சமுதாயக் கூடம் அமைக்கப்படும்.
செஞ்சி மற்றும் மரக்காணத்தில் தலா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.
திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் இடத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருமண மண்டபம், சமையற்கூடம் மற்றும் உணவருந்தும் இடம் ஆகியவை அமைக்கப்படும்.
விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலாமேடு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில், திருப்பாச்சனூர் ஆற்றுப்படுகையிலிருந்து குடிநீர் வழங்கப்படும்.
விழுப்புரம் நகராட்சியின் பழம்பெரும் அலுவலக கட்டடம் 2 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், டவுன் ஹால்-ஆக மாற்றப்படும்.
தென்னமாதேவி, அயனம்பாளையம் கிராமங்களில், பம்பை ஆற்றின் வடகரையில், சங்ககால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
வீடூர் அணையிலிருந்து மயிலம், பாதிரப்புலியூர் வழியாகச் செல்லும் 15 கிலோ மீட்டர் சாலை 8 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
சமீப காலமாக நான் சுற்றுப்பயணம் செய்த மாவட்டங்களில், அதிக அறிவிப்புக்களை பெற்ற மாவட்டம் எந்த மாவட்டம் என்று கேட்டால் இந்த விழுப்புரம் மாவட்டம் தான்.
நமக்கு நிதி ஒன்றுதான் தடையே தவிர, வேறு எந்தத் தடையும் கிடையாது. நிதி இல்லை, நிதி இல்லை என்று புலம்பிக்கொண்டு இருக்காமல், மக்கள் குறைகளை நீக்கிட, அதை நீக்கி, நிறைவேற்றுகின்ற அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது.
சில எதிர்க்கட்சித் தலைவர்கள் வெறும் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது ஆட்சியின் குறை இல்லை, அவர்கள் சிந்தனையில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைபாடு! அவர்கள் தானும் நல்லது செய்ய மாட்டார்கள், அடுத்தவர்களையும் நல்லது செய்ய விடமாட்டார்கள். மக்களுக்கு நல்லது நடந்தால் அவர்களுக்குப் பிடிக்காது. அதைப் பற்றி கவலைப்படாமல் நாம் நம்முடைய கடமையை தொடர்ந்து ஆற்றிக் கொண்டு வருகிறோம் என்றார்.

