கதிகலங்கும் புதுச்சேரி ! தினம் ஒரு வெடிகுண்டு மிரட்டல்; இன்று ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்த மிரட்டல்
கடந்த சில வாரங்களாக அரசு அலுவல கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் தற்போது ஜிப்மர் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவல கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது. கவர்னர் மாளிகை, முதலமைச்சர் வீடு, பிரெஞ்சு தூதரகம், ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது.
தொடர்ந்து கடந்த வாரத்தில் நட்சத்திர விடுதிகள், ரெஸ்டாரண்ட்டுகள் ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்தது. போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் மிரட்டல் தொடர் கதையாகி உள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் நபரை போலீசார் கண்டறிய முடியவில்லை. புதுவை சைபர் கிரைம்போலீசாரால் துப்புதுலக்க முடிவில்லை. இதனையடுத்து மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர். மீண்டும் வெடிகுண்டு இந்த நிலையில் நேற்று கவர்னர் புதுச்சேரி மாளிகைக்கு இமெயிலில் ஒரு தகவல் வந்தது. அதில், கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என தகவல் இருந்தது.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. போலீசார் மோப்ப நாயுடன் வந்து சோதனையிட்டனர் . சோதனையில், ஒன்றுமில்லை என தெரிந்தவுடன் இதுவும் வதந்தி என போலீசார் கூறிவிட்டு சென்று விட்டனர். இன்று அதிகாலை கடற்கரை சாலையில் உள்ள கலாச்சார மையத்தில் கணபதி ஹோமம் நடந்தது. இதனால் கவர்னர் கைலாசநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர். கவர்னர் மாளிகை அதிகாரிகள் தற்காலிக கவர்னர் மாளிகையில் இருந்தனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
இந்த நிலையில் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் பார்க்க வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
அவர்கள், அங்கிருந்த நோயாளிகளையும் உறவினர்களையும் உடனடியாக வெளியேற்றிவிட்டு அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஜிப்மர் வளாகத்தில் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, நிர்வாக அலுவலகம், புற்றுநோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவமனை என பல்வேறு பிரிவுகள் அமைந்திருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவசர சிகிச்சைப் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு மற்றும் நோயாளிகள் தங்கி இருக்கும் வார்டுகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் மோப்ப நாய்கள் உதவிகளுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஜிப்மர் வளாகத்தில் தங்கி இருந்த அனைத்து நோயாளிகளின் உறவினர்களும் அதிரடியாகவும் வெளியேற்றப்பட்டனர்.
வெளியில் இருந்து மருத்துவமனைக்குள் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத வகையில் அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டு அதிரடியாக சோதனை நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு சோதனையால் வாயிற் கதவுகள் மூடப்பட்டுள்ளதால் கதவுக்கு வெளியே ஏராளமானோர் குவிந்துள்ளனர்.




















