ஆரோவில்லில் ராணுவ தளபதி: இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பாதுகாப்புத் துறை & கல்வி கூட்டு முயற்சி!
இந்திய பாதுகாப்புத் துறைக்கும், ஆரோவில்லின் கல்வி முயற்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து தென் மண்டல ராணுவத் தளபதி திங்ராஜ் ஆலோசனை

விழுப்புரம்: இந்திய பாதுகாப்புத் துறைக்கும், ஆரோவில்லின் கல்வி முயற்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து தென் மண்டல ராணுவத் தளபதி திங்ராஜ் சேத் ஆரோவில் நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தென் மண்டல ராணுவத் தளபதி திங்ராஜ் சேத் ஆரோவில் வருகை
தென்னிந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரி (GOC-in-C) லெப்டினன்ட் ஜெனரல் திங்ராஜ் சேத் ஆரோவில் நகருக்கு வருகை தந்தார். மனித ஒற்றுமையின் மையமாக விளங்கும் ஆரோவில்லின் தனித்துவமான சர்வதேச நகரத்தைக் கண்டறிந்தார். இளைஞர் மேம்பாட்டுக்கான உயர்மட்ட விவாதங்கள் ஆரோவில் ஃபவுண்டேஷனின் செயலாளரும், குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளருமான டாக்டர். ஜெயந்தி எஸ். ரவி (IAS) உடன் லெப்டினன்ட் ஜெனரல் சேத் கலந்துரையாடினார்.
இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர உதவும் வகையிலான உடற்பயிற்சி திட்டங்கள்
இந்திய பாதுகாப்புத் துறைக்கும், ஆரோவில்லின் கல்வி முயற்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.இந்திய ராணுவத்துடன் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் ஆரோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமையும். குறிப்பாக, இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர உதவும் வகையிலான உடற்பயிற்சி திட்டங்கள், தேசிய மாணவர் படை (NCC) திட்டங்களை மேம்படுத்துதல், மற்றும் ஆரோவில்லின் தனித்துவமான கல்வித் தத்துவத்துடன் இணைந்து செயல்படும் விரிவான வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
ஆரோவில்லின் தொலைநோக்குப் பார்வைலெப்டினன்ட் ஜெனரல் சேத், ஆரோவில்லின் முக்கியமான அடையாளமான மாத்ரிமந்திர் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார். மேலும், ஆரோவில்லின் வளர்ச்சி குறித்த விவாதங்களில் ஈடுபட்டார். அங்கிருந்த ஆரோவில் வொர்க்கிங் குரூப் உறுப்பினர்களான ஜோசபா, செல்வராஜ், சிந்துஜா மற்றும் ஆந்திம் ஆகியோர் ஆரோவில்லின் தற்போதைய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் தத்துவக் கருத்துக்கள் குறித்து அவருக்கு விளக்கினர்.
நமது ஆயுதப் படைகளுக்கு நாம் நிறைய கடன்பட்டிருக்கிறோம்!
பரஸ்பர பாராட்டும், எதிர்கால ஒத்துழைப்பும்லெப்டினன்ட் ஜெனரல் சேத்தின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த டாக்டர். ஜெயந்தி எஸ். ரவி, இந்திய ராணுவம் மீதான பெருமையையும், சுதந்திர தினத்திற்குப் பிறகு இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார். "நமது ஆயுதப் படைகளுக்கு நாம் நிறைய கடன்பட்டிருக்கிறோம்," என்று அவர் கூறினார்.
இந்திய பாதுகாப்புப் பணியாளர்கள் மீது ஆரோவில் சமூகத்துக்கு உள்ள ஆழ்ந்த மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். லெப்டினன்ட் ஜெனரல் சேத் இந்த முன்மொழிவுகளுக்குச் சாதகமாகப் பதிலளித்தார். "விரைவில் நேர்மறையான முன்னேற்றங்கள் வரும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், "தாயகத்தின் மீதும், உலகம் மற்றும் மனிதகுலத்தின் மீதும் தைரியம், அன்பு மற்றும் நம்பிக்கை ஆகிய மதிப்புகளை வளர்க்கும் ஆரோவில்லின் கல்வி முயற்சிகளுக்கு" அவர் உற்சாகம் தெரிவித்தார்.





















