(Source: ECI/ABP News/ABP Majha)
விழுப்புரம் அதிமுகவை இரண்டாக்க சொன்ன ஷெரீப்...! - அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணி...! - சி.வி.சண்முகத்தின் மிரட்டலா ?
சசிகலாவை சென்னையில் சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் விசுவாசி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை நீக்கம் செய்து அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப். இவர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளராகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தீவிர விசுவாசியாக பயணித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகள் சிலருடன் சென்று சென்னையில் சசிகலாவை சந்தித்து அதிமுகவை தலைமை ஏற்க வாருங்கள் என்று கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இது குறித்து திண்டிவனம் நகர அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில் “முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை செல்லும் பொழுது திண்டிவனம் அருகே இருக்கக்கூடிய சலவாதி பகுதியில் முகமது ஷெரீப் அவரின் டீ டைம் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், அந்த டீக்கடைக்கு சென்று எடப்பாடி பழனிசாமி டீ அருந்தி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் டீக்கடைக்கு வந்த எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய முகமது ஷெரீப், விழுப்புரம் மாவட்டதை இரண்டாக பிரித்து வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். இந்த தகவலை எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகத்திடம் கூறியதாக தெரிகிறது.
தற்போது மாவட்ட செயலாளர் பதவியில் வகித்து வரும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முகமது ஷெரீப்பை அழைத்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் முன்னுக்குப்பின் முரணாக முகம்மது ஷெரீப் பதில் அளித்துள்ளார். அதன் பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் சீட் கேட்டுள்ளார் முகமது ஷெரீப். அப்போது அடுத்த முறை வாய்ப்பு வழங்குவதாக சி.வி.சண்முகம் கூறியதால் ஷெரீப் அதிர்ச்சி அடைந்தார். இந்தநிலையில் தான் சென்னையில் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவுக்கு தலைமையேற்க வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே சசிகலாவை சந்தித்து பேசிய, திண்டிவனம் அர்பன் வங்கித் தலைவர் கே.சேகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவருமான முகமது ஷெரீப், நகர சிறுபான்மை பிரிவுச் செயலாளர் மஸ்தான், திண்டிவனம் மாவட்டக் கழக பிரதிநிதி ஸ்ரீதர் சங்கர் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்