ABP Nadu Impact: விழுப்புரத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் தீண்டாமை சுவர் - வட்டாட்சியர் நேரில் விசாரணை
பட்டியலின சமூகத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதை மறைத்து 12 அடி உயரத்திற்கு சுவர் அமைத்துள்ளனர்.
விழுப்புரம்: கோலியனூர் அருகேயுள்ள புதிய மனைப்பிரிவில் 12 அடி உயரத்திற்கு பட்டியலின சமூகத்தினர் வாழும் பகுதியை மறைத்து தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டதை அகற்றகோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பணங்குப்பம் பஞ்சாயத்தில் சர்வே எண்55/4 Part 58/6, 58/7, 58/8, 60/1 உட்பட இடத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு சாந்தி என்ற பெயரில் மனைப்பிரிவு போடப்பட்டுள்ளது. இந்த மனைப்பிரிவில் மனை எண் 26, 27, 32, 51, 52, 68, 71 மற்றும் மனைப்பிரிவில் பூங்கா வரும் இடம் ஒட்டி அரசு புறம்போக்கு இடத்தில் 12 வீடுகளும், அதற்கு எதிர்ப்புரத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளும் என 30க்கு மேற்பட்ட வீடுகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.
பணங்குப்பம் பழைய காலனி பகுதியில் 1991 ஆம் ஆண்டு சாந்தி நகர் என்ற மனைப்பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. இந்த மனைப்பிரிவு தற்போது மறு சீரமைப்பு செய்யப்பட்டு விற்பனையை தனியார் நிறுவனம் தொடங்கி விற்பனையை தொடங்கியுள்ளனர். மனைப்பிரிவு விற்பனைக்காக மனைப்பிரிவு உள்ள பகுதிக்கு பின்புறம் பட்டியலின சமூகத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதை மறைத்து 12 அடி உயரத்திற்கு சுவர் அமைத்துள்ளனர்.
பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள வாய்க்கால் பொறம்போக்கு இடத்தினை ஆக்கிரமித்து அப்பகுதி மக்கள் வாழும் பகுதியை மறைத்து தீண்டாமை சுவர் அமைத்துள்ளதால் அதனை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக சுவரினை அகற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை சுவரை அகற்ற வேண்டுமெனவும், வாய்க்கால் புறம்போக்கு இடத்தில் பட்டியலின சமூக மக்கள் கழிவுறைகள் கட்டி பயன்படுத்தி வந்ததை அகற்றி உள்ளதால் மனைபிரிவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்த நிலையில் ஏபிபி நாடு செய்தி வெளியிட்ட நிலையில் இன்றைய தினம் வட்டாட்சியர் நேரில் விசாரணை மேற்கொண்டார், அப்போது இதுகுறித்த முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.