பிள்ளைச்சாவடியில் ரூ.14.5 கோடியில் மீன் இறக்கு தலம், கடல் அரிப்பை தடுக்க கல்சுவர் அமைக்கப்படும் - அமைச்சர் பொன்முடி
மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிள்ளைச்சாவடியில் 14.5 கோடியில் மீன் இறக்கு தலம் மற்றும் கடல் அரிப்பை தடுக்க கல்சுவர் அமைக்கப்படும் - அமைச்சர் பொன்முடி பேட்டி
கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் 14.5 கோடியில் மீன் இறக்கு தலம் மற்றும் கடல் அரிப்பை தடுக்கும் பணிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக கல் சுவர் எழுப்பப்பட்டு கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு செய்தார், தொடர்ந்து கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரத்தில் 18 மிமீ மழை பதிவாகியுள்ளதாகவும், புயல் காரணமாக வீடுகளுக்கோ, கால்நடைகளுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார், மேலும் பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்யப்படும் என கூறிய அவர், பிள்ளைச்சாவடி பகுதியில் இருப்பவர்களின் பிரதான கோரிக்கை தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது தான் என்றும், பிள்ளைச்சாவடி மக்களின் கோரிக்கையை ஏற்று இதற்காக 14.5 கோடியில் மீன் இறக்கு தலம் மற்றும் கடல் அரிப்பை தடுக்கும் பணிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஒப்பந்த பணிகள் முடிவடைந்து, கள பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளதாக கூறிய அமைச்சர் பொன்முடி, உடனடியாக கல் சுவர் எழுப்பப்பட்டு கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார். முன்னதாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக பிள்ளைச்சாவடி வந்த அமைச்சர் பொன்முடி, வரும் வழியில் காற்றின் காரணமாக சாலையில் முறிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகளை பார்வையிட்டார், அமைச்சரின் இந்த ஆய்வின் போது விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.