திண்டிவனம் நகராட்சியில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா அறிவிப்பு - காரணம் என்ன..?
மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் நாங்கள் கவுன்சிலராக இருப்பதைவிட ராஜினாமா செய்வதே மேல்.
திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து, வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று 5 மணி அளவில் நகர மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் தொடங்கியது. கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அனைத்து கவுன்சிலர்கள், நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வியிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். மேலும் 13 திமுக கவுன்சிலர்கள் அவர்களின் வார்டுகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யவில்லை, இதனால் பொதுமக்கள் மத்தியில் தங்களுக்கு அவமானமாக உள்ளது என குற்றம் சாட்டினர்.
கூட்டம் காரசாரமாக நடைபெற்று இருந்த நிலையில், நகர மன்ற உறுப்பினர் சீனி.சின்னசாமி எழுந்து ராஜினாமா கடிதத்தை கையில் காட்டியபடி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நகர மன்ற கூட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இதனால் முதலமைச்சரிடம் நேரம் கேட்டுள்ளோம். நேரம் கிடைத்தவுடன் திமுக கவுன்சிலர்கள் 13 பேர் முதலமைச்சரை சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதத்தை கொடுத்தும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.
மேலும், திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் கூறுகையில், நகர மன்ற தலைவரிடம் எது கேட்டாலும் சரியான பதில் தெரிவிக்கவில்லை மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மருமகன் ரிஸ்வான் தலையீடு நகராட்சியில் உள்ளது எனவும் அதிருப்தி கவுன்சிலர்கள் தெரிவித்தனர். முன்னதாக நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பெண் அதிருப்தி 7வது வார்டு கவுன்சிலர் புனிதா ராஜேந்திரன் வாயில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கவுன்சிலர் புனிதா ராஜேந்திரன் தீர்மானம் நகல்களை கீழே கொட்டி ஒன்பது கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது அதில் எந்த ஒரு பணியும் செய்யவில்லை மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக கூறினார்.
மேலும் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் நாங்கள் கவுன்சிலராக இருப்பதைவிட ராஜினாமா செய்வதே மேல் எனக்கூறி திமுக 12 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மீதமுள்ள கவுன்சிலர்களை வைத்து இரவு 7.30 மணி வரை கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனத்தில் இரண்டாக பிளந்துப்போன திமுக
இந்த நிலையில் திண்டிவனம் நகராட்சியில் தொடர்ந்து டெண்டர் உட்பட பல்வேறு விவகாரங்களில் அமைச்சர் செந்தில் மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் தலையீடு அதிகமாக இருப்பதால் திண்டிவனம் திமுக இரண்டாக பிளந்தது, இதில் ஒரு தரப்பு அமைச்சர் பொன்முடியின் பக்கம் சென்றனர். இதனால் திண்டிவனம் திமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திண்டிவனம் நகராட்சி நிர்வாகம் எந்தவித மக்கள் பணியும் மேற்கொள்ளவில்லை நகர மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி ஆணையர் எந்த பதிலும் அளிக்காததால் வாக்குவாதம் நடைபெற்றது.
செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மஸ்தானை வெளுத்து வாங்கிய நிர்வாகிகள்
இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் மஸ்தான் தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது அதில் திமுகவின் முன்னணி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என வாக்குவாதம் நடைபெற்றது. இதில் ஒருவர் "பொருளே இல்லை எனக்கு எதுக்கு பொருளாளர் பதவி" என கடுமையாக பேசி அமைச்சர் மஸ்தானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் திண்டிவனம், செஞ்சி மயிலம், மரக்காணம் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மொத்தமும் அமைச்சர் மஸ்தான் மீது கொந்தளிப்பில் உள்ளனர்.
மருமகன் தலையீடால் அதிருப்தியில் திண்டிவனம் திமுக
மேலும் செஞ்சி மஸ்தான் கட்சிக்காரர்கள் என்று பொதுவாக பார்க்காமல் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மட்டுமே பதவிகள் கொடுப்பது, டெண்டர் ஒதுக்குவது என ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து திண்டிவனத்தை சேர்ந்த கவுன்சிலர்கள் 17 பேர் முதல்வரிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவியை மாற்ற வேண்டுமென புகார் அளித்துள்ளனர். மேலும் திண்டிவனம் நகர திமுகவில் தற்போது வரை அதிருப்தியில் உள்ளது. குறிப்பாக அமைச்சர் மஸ்தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திண்டிவனத்தில் உள்ள திமுக மூத்த நிரவகிகள் மட்டுமின்றி செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், திமுக கவுன்சிலர்கள் கூட கலந்துகொள்வதில்லை.
திண்டிவனம் திமுகவினருக்குள் வாக்குவாதங்களும், கோஷ்டி பூசல்
இதுகுறித்து திண்டிவனம் திமுக நிர்வாகிகள் கூறுகையில், அமைச்சர் மஸ்தான் தொடர்ந்து இதே போன்று ஒருதலைப்பட்சமான நடந்து வருவதும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை புறக்கணிப்பத்து போன்ற நிகழ்வும், அமைச்சரின் மருமகனும், சமீபத்தில் கட்சியில் சேர்ந்துள்ள நிர்வாகிகள் அமைச்சரின் ஆதரவோடு டெண்டர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தலையீடு அதிகமா இருப்பதால் திண்டிவனம் திமுகவினருக்குள் வாக்குவாதங்களும், கோஷ்டி பூசால்களும் அதிமாக இருப்பதால் திண்டிவனதில் திமுக அதிருப்தியில் உள்ளது.