“தமிழக இளைஞர்களுக்கு வேலை இல்லை என நாங்கள் கூறவில்லை” - விக்கிரமராஜா
எங்களை பொறுத்தவரை வடமாநிலம், மேற்கு மாநிலம், கிழக்கு மாநிலம், தென்மாநிலம் என பிரித்து பார்க்க முடியாது - விக்கிரமராஜா
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேலூர் மாவட்டம் சார்பாக தமிழர் திருநாள், விருதுகள் வழங்குதல் மற்றும் மாவட்ட பொதுக் குழு என முப்பெரும் விழா வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரானந்த், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டியில், “வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக வருகிற மே ஐந்தாம் தேதி ஈரோட்டில் வணிகர் தின மாநில மாநாடு, வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. வேலூரில் இருந்து 7000 வணிகர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஜிஎஸ்டி மூலமாக பல்லாயிரம் கோடிகளை வசூலித்து தரக்கூடிய வணிகர்களுக்கு மத்திய அரசு இரண்டு (2%) சதவிகிதம் ஒதுக்கப்பட்டு சாமானிய பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு அரசு ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டும் என்பதை இக்கூட்டம் வாயிலாக வலியுறுத்துகிறோம். ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்படும் தொகை நடுத்தர மக்களுக்கு பயண்படாமல் பெரு முதலாளிகளுக்கு பயணடைந்து வருகிறது. வரா கடன் என்ற அடிப்படையிலே 15 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது இதற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
ஜிஎஸ்டியை வசூலித்து தரும் வியாபாரிகளுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதேனும் நன்மைகள் பெறப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு அது ஏமாற்று பட்ஜெட் ஆகவே அமைந்துள்ளது. நகர, மாநகர பகுதி கடைகள் முறைபடுத்துவதில் விரைவில் தீர்வு காணப்படும். தமிழக மக்களுக்கு நாங்கள் என்றும் வேலை தர மாட்டோம் என சொன்னது இல்லை. தமிழ் மக்கள் வேலைசெய்ய தயார் என்றால் நாங்களும் வேலை வாய்ப்பை கொடுக்க தயார். பழைய கடைகளை இடித்து புதியதாக கட்டப்படும் கடைகளுக்கு, பழைய ஆட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமைச்சர் நேருவை வலியுறுத்துகிறோம்.
எங்களை பொறுத்தவரை வடமாநிலம், மேற்கு மாநிலம், கிழக்கு மாநிலம், தென்மாநிலம் என பிரித்து பார்க்க முடியாது. எங்களுக்கு ஆட்கள் முக்கியம். தமிழக இளைஞர்கள், கஞ்சா, மது போன்ற பழக்கத்திற்கு ஆளாகாமல் உழைக்க முன் வர வேண்டும். நாங்கள் எல்லாம் உழைத்து தான் முன்னுக்கு வந்துள்ளோம். தமிழக நிதிநிலை அறிக்கையில் நாங்கள் எதிர்பார்பது, உள்ளாட்சி நகராட்சி கடை வாடகையை சீர்படுத்திட வேண்டும், லைசன்ஸ் முறையை சிங்கிள் விண்டோவாக அமைத்து தர வேண்டும். தமிழ்நாடு நிதி நிலை அறிக்கைக்கு முன் முதலமைச்சர் எங்களை அழைத்து பேசுவார் அப்போது எங்களின் கோரிக்கைகளை முழுமையாக தெரிவிப்போம்” என கூறினார்.