இப்படியும் கூட ரோடு... எதுக்கு இந்த கேடு... நிறுத்தி வைத்த வாகனத்தோடு போடப்பட்ட சிமெண்ட் சாலை!
வேலூர் மாவட்டத்தில் தெருவில் நிறுத்தி வைத்த இருசக்கர வாகனத்தோடு சேர்ந்து சிமெண்ட் சாலை போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![இப்படியும் கூட ரோடு... எதுக்கு இந்த கேடு... நிறுத்தி வைத்த வாகனத்தோடு போடப்பட்ட சிமெண்ட் சாலை! Vellore New Cement road laid without moving parked two wheeler in Vellore City- Watch Video இப்படியும் கூட ரோடு... எதுக்கு இந்த கேடு... நிறுத்தி வைத்த வாகனத்தோடு போடப்பட்ட சிமெண்ட் சாலை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/28/a719ba9f950a13cfe4bd547cc0d8b51a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வேலூர் மாநகராட்சி சீர்மிகு நகராக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்ட பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காளிகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா. இவரது இருசக்கர வாகனத்தை நேற்று இரவு வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது. அத்தோடு சேர்ந்து தெருவோரம் நிற்க்க வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை எடுக்க முயற்ச்சித்துள்ளார். ஆனால் சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் எடுக்கமுடியவில்லை. பின்னர் போராடி உடைத்து வண்டியை மீட்டுள்ளனர்.
#JUSTIN | வேலூர் – இருசக்கர வாகனத்தோடு சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் ரோடு…வைரலாகும் வீடியோhttps://t.co/wupaoCQKa2 | #vellore #Tamilnadu #Viralvideo pic.twitter.com/WEfVMCInnd
— ABP Nadu (@abpnadu) June 28, 2022
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கூறுகையில், "இது என்னோட தம்பி வண்டி தான். நேற்று இரவு 11.00 மணிவரை கடையில் தான் இருந்தோம் அதுவரை சாலை போடவுள்ளதாக எந்த அறிவிப்பும் வழங்கவில்லை. மாறாக இரவோடு இரவாக சாலை போட்டுள்ளனர். அப்போது எங்களது வண்டிக்கும் சேர்த்தே சாலை போட்டுள்ளனர். இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கின்றனர். இப்போது எங்கள் வண்டி நாசம் ஆகிவிட்டது. முன் அறிவிப்பு கொடுத்திருந்தால் வண்டியை தெருவில் விட்டிருக்க மாட்டோம். அல்லது அவர்களே வண்டியை அப்புறப்படுத்தியாவது சாலை போட்டிருக்கலாம்.
ஒரு வேலை மனிதன் உறங்கிக்கொண்டிருந்தால் கூட அவனுக்கும் சேர்த்தே சாலை போட்டிருப்பார்கள் போல. எங்கள் பகுதியில் போடப்பட்டு வரும் சாலை சுத்தமாக தரம் இல்லாமல் கடமைக்கு போடப்பட்டு வருகிறது. தெருவில் உள்ள குப்பை, கற்கள், கட்டைகள் என எதையும் அகற்றாமல் சாலை போடுகிறார்கள் இதனால் மக்கள் பணம் தான் வீணாகிறது. இனியாவது அதிகாரிகள் இவற்றை கண்காணித்து தரமான சாலை அமைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)