Crime | நாடகக் கம்பெனியா நடக்குது? : BHEL அதிகாரி வீட்டில் கொள்ளை : உறவினருடன் பணிப்பெண்ணின் திட்டம் அம்பலம்..!
போலீஸ் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசுக்கு பர்வீன் மீது சந்தேகம் எழும்பியது.
சத்துவாச்சாரியில் ஓய்வுபெற்ற பெல் ஊழியர் வீட்டில் 30 சவரன் தங்கநகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், அவரது வீட்டு பணிப்பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி டபுள் ரோடு பகுதியில் வசித்து வருபவர் பிச்சாண்டி வயது (63) இவர் ராணிப்பேட்டையில் இயங்கிவரும் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் .
இவரது வீட்டின் 3 போர்ஷன்களிலும், அவரது உறவினர்களே தனித்தனியாக வசித்து வருகின்றனர் . இந்நிலையில் தனது உறவினர் ஒருவரின் , துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக , வயது முதிர்ந்த அவரது சித்தி, சித்தப்பாவை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, மீதமுள்ள அனைவரும் கடந்த மாதம் ஜூலை 31-ஆம் தேதி இரவு , வீட்டிலிருந்து புறப்பட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். துக்க நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு அடுத்த நாள் காலை 11.30 மணியளவில் திரும்பியுள்ளனர்.
அப்பொழுது பிச்சாண்டி வீட்டின், மர லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பிச்சாண்டி இது குறித்து சத்துவாச்சாரி காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
போலீஸ் விசாரணையில் பிச்சாண்டி வீட்டில் வேலைசெய்யும் ஆற்காடு நவாப் தெருவை சேர்ந்த அவரது பணிப்பெண் பர்வீன், வயது 25 என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பொழுது பர்வீன் மற்றும் சத்துவாச்சாரி வள்ளலார் வாட்டர் டேங்க் பகுதியை சேர்ந்த பானு, வயது 40 ஆகிய இருவரும் நகை மற்றும் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் இன்று காலை சத்துவாச்சாரி போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 30 சவரன் நகையை போலீசார் மீட்டனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில் ஆற்காட்டை சேர்ந்த பர்வீன் கணவருடன் கருத்து மோதல் காரணமாக, சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் பானு வீட்டில் தங்கியுள்ளார். பானுவின் வீட்டில் தங்கியபடியே, பிச்சாண்டி வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிச்சாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி வீட்டில் இருக்கும் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருட திட்டம் தீட்டியுள்ளார் பர்வீன்.
இதுகுறித்து தனது உறவினரான பானுவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். பானு அளித்த ஆலோசனையின்படி பர்வீன் வீட்டிலிருந்த 30 சவரன் நகை மற்றும் பணத்தை திருடி பானுவிடம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து எதுவும் தெரியாதது போல் நடித்துள்ளார் . போலீஸ் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசுக்கு பர்வீன் மீது சந்தேகம் எழும்பியது. 5 நாட்களாக பிறருடன் சேர்ந்து தேடுவதுபோல நாடகமாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் பர்வீன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பானு மட்டும் பர்வீன் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்தனர் .
வீட்டு உரிமையாளர் வீட்டில் திருடிவிட்டு, அப்பாவிபோல் நடித்து கடந்த 5 நாட்களாக நாடகமாடிய பர்வீன், கைது செய்யப்பட்ட சம்பவம் , இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.