சிகிச்சைக்கு மூதாட்டியிடம் பேரம் பேசிய அரசு மருத்துவர் - வைரலாகும் அதிர்ச்சி ஆடியோ
வந்தவாசியில் கை உடைந்த மூதாட்டியிடம் அரசு மருத்துவமனை மருத்துவர் எலும்பு முறிவுக்கு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளிப்பதாக கூறிய அரசு மருத்துவரின் ஆடியோவால் பரபரப்பு.
திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி கே.எஸ்.கே நகரை சேர்ந்தவர் சபையா பீவி வயது (70). இவர் வீட்டில் நடந்து சென்ற போது கீழே விழுந்து கை உடைந்துள்ளது. இதனால் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவ பதிவு செய்து (ஓப்பி சீட்டு) உள்ளே சென்று மருத்துவரை அணுகிய போது அங்கு அருண் மகேஷ் என்ற எலும்பு முறிவு மருத்துவர் பணியில் இல்லை. இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மற்றொரு மருத்துவர் எலும்பு முறிவு மருத்துவரின் செல்போன் நம்பரை கொடுத்து பேச சொல்லி இருக்கிறார். அப்போது கை உடைந்த மூதாட்டி சபையாவின் உறவினரான அக்பர் என்பவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எலும்பு முறிவு மருத்துவரான அருண் மகேஷிடம் செல்போனில் பேசிய போது மூதாட்டியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு மருத்துவர் 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவரின் ஆடியோ
அப்போது ஏழ்மையான குடும்பம் என்பதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமா என்று மருத்துவரிடம் மூதாட்டி சபியாவின் உறவினரான அக்பர் கேட்டபோது, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நீங்கள் சென்றால் அங்கு நீண்ட நாட்கள் ஆகிவிடும். சீக்கிரம் மருத்துவம் பார்க்க மாட்டார்கள். அதனால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று மருத்துவர் வற்புறுத்தி உள்ளார். மேலும் அறுவை சிகிச்சை செய்வதற்கு அரசு மருத்துவர் பேரம் பேசி 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் மற்றும் 28 ஆயிரம் ரூபாய்க்கு அறுவை சிகிச்சை செய்கிறேன் என்று செல்போனில் எலும்பு முறிவு மருத்துவர் அருண் மகேஷ் பாதிக்கப்பட்டவர்களிடம் அறுவை சிகிச்சைக்கு பேரம் பேசி உள்ளார். பாதிக்கப்பட்ட மூதாட்டியிடம் சிகிச்சை அரசு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வதற்கு பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொதுமக்கள் வேதனை
இதை அடுத்து பாதிக்கப்பட்ட கை உடைந்த மூதாட்டி சாபிரா பீவி என்பவர் வந்தவாசி அருகே உள்ள சித்தேரி என்ற இடத்திற்குச் சென்று புத்தூர் கட்டு கட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எலும்பு முறிவு மருத்துவரே ஒரு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யாமல் தனியார் மருத்துவமனைக்கு வரக்கூறி அறுவை சிகிச்சைக்கு பேரம் பேசி சிகிச்சை அளிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மருத்துவமனையின் லட்சணம் இதிலிருந்தே தெரிகிறது என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். மேலும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததாலும் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டால் கூட இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துமனையை நாடி செல்லவேண்டிய நிலைமையில் உள்ளனர்.