Tiruvannamalai: குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவியின் காலில் விழுந்து கதறிய கிராம மக்கள்
திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கை அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவியின் காலில் விழுந்து கதறல்.
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகின்றது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும், நகரின் மையப் பகுதியில் , கிரிவலப்பாதையில் உள்ளதாலும் இந்த குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை அருகே உள்ள தேவனந்தல் பகுதியில் சுமார் 6 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் மலைக்குன்று அடிவாரப் பகுதிகளை அழித்து குப்பை கிடங்கை அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேவனந்தல், அத்தியந்தல், புனல்காடு, கலர்கொட்டாய் உள்ளிட்ட பல கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கே குப்பை கிடங்கை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கை அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவியின் காலில் விழுந்து கதறல் தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரிவைத்து அழுதனர்.@abpnadu @SRajaJourno @evvelu pic.twitter.com/9gkmH0d0eI
— Vinoth (@Vinoth05503970) May 2, 2023
இந்நிலையில் கடந்த சில நாட்களாக புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலத்தை சமம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அங்கு நகராட்சிக்கு சொந்தமாக குப்பை கிடங்கு அமைக்கப்படுவதில்லை என்றும், கிராம ஊராட்சிகளின் சார்பில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு வருவதாக கூறி அதிகாரிகள் தற்போது குப்பை கிடங்கு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் விவசாயம், குடிநீர், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டி கிராம பஞ்சாயத்தில் இந்தப் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றக்கோரி பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த பெண்கள் குழந்தையுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவி கலைவாணி முனுசாமி அங்கு ஒன்று திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் பொதுக்கள் திட்டவட்டமாக எங்கள் பகுதியில் குப்பை கிடங்கு வேண்டாம் என்று அதனை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் என்று தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவி கலைவாணி முனுசாமியின் காலில் விழுந்தும், மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு கதறி குப்பை கிடங்கை அமைக்க கூடாது என சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த குப்பை கிடங்கு தேவனந்தல் பகுதியில் அமைக்கப்படுவதால் ஆடையூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என ஊராட்சி மன்ற தலைவி தெரிவித்தார். குப்பை கிடங்கை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக மனுவில் கையெழுத்து போட்டு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்ற ஊராட்சி மன்ற தலைவியை வலியுறுத்தி சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முற்றுகையிட்டு காலில் விழுந்து கதறி அழுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.