திருவண்ணாமலையில் கூடுதலாக 19 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் - நாளை முதல் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 கட்டமாக கூடுதலாக 19 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3-ம் கட்டமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 17-ந் தேதி முதல் செயல்பட தொடங்குகிறது. நாளை முதல் விவசாயிகள் முன்பதிவு செய்து பயன் பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்து உள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-23 காரீப் சம்பா மற்றும் நவரை பருவத்தில் 3-ம் கட்டமாக கூடுதலாக 19 நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 17-ந் தேதி (திங்கள்கிழமை) முதல் செய்யப்பட உள்ளது. இதற்கான இணையவழி முன்பதிவு நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கு தமிழக அரசு சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.100 உயர்த்தி ரூ.2 ஆயிரத்து 160-ம் இதர ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி ரூ.2 ஆயிரத்து 115-ம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் கொள்முதல் நிலையங்களுடன் செய்யாறு தாலுகாவில் நாவல்பாக்கம், பாப்பந்தாங்கல், காழியூர், அளத்துறை, முளகிரிப்பட்டு, உக்கல், வெம்பாக்கம் தாலுகாவில் குத்தனூர், சிறுநாவல்பட்டு, சிறுவஞ்சிப்பட்டு, சேணிநல்லூர், வந்தவாசி தாலுகாவில் கோவலை, இரும்பேடு, தெள்ளார், மலையூர், தென்னந்தூர், பெரணமல்லூர், செங்கம்பூண்டி கூட்டுசாலை, வல்லம் மற்றும் மேல்சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.மேற்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்து விவசாயிகள் பயன் பெறலாம். நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது. பயன்பெற விரும்பும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும், உதவி வேளாண்மை அலுவலரிடமும் பெற வேண்டும். நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்திற்கு மேற்குறிப்பிட்ட சான்றுகள், ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும். நேரடி நெல் கொள் முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார்.
பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்பந்தப்பட்ட விவசாயியின் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு "வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது" என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும். பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு அவரால் பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல், நிராகரிப்பு செய்யப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு சென்று நெல் அளிக்க வேண்டும். விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம் சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற காலதாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 94872 62555, 94452 45932 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம்) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தெரிவித்தால் அவை உடனடியாக சரிசெய்யப்படும். எனவே விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தங்களின் நெல்லை நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கி பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.