Tiruvannamalai: 2 கிலோமீட்டர் டோலி கட்டி எடுத்து செல்லப்படும் சடலங்கள்.. சாலை அமைக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை!
ஜவ்வாது மலையில் இறந்தவரின் உடலை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு டோலி கட்டி தோளில் சுமந்து செல்லும் பொதுமக்களின் அவல நிலை சாலை வசதி ஏற்படுத்தி தர மலைவாழ் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், இன்னும் சாலைவசதி பெறாத மலைக்கிராமங்கள் நம் நாட்டில் உள்ளன. அதில் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகில் உள்ள கானமலை ஊராட்சி சீங்காடு கிராமத்தில் வசிப்பவர், ராமராஜ். இவரது மனைவி சுசீலா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுசீலாவை வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சுசீலாவீற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பயன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனையடுத்து சுசீலாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து சீங்காடு கிராமத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது
.அங்கு இருந்து அமிர்தி வழியாக சீங்காடு கிராமத்துக்கு சரியான சாலை வசதி இல்லாததால் பாதிரிபெருவள்ளி என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து சுசீலாவின் உடலை டோலி மூலமாக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலைப்பாதையில் உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் சுமந்து சென்றனர்.இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே கானமலை ஊராட்சி, எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.. இவருடைய உடலும் எலந்தம்பட்டு கிராமத்தில் சாலை வசதி இல்லாத காரணத்தால் படவேடு அருகே ஜவ்வாது மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு அவரது உறவினர்கள் டோலி மூலமாக சுமந்து கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கானமலை மலைவாழ் மக்களிடம் பேசுகையில்;, ''கானமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. ஊராட்சிகளில் உள்ள மலைக் கிராமங்களுக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் இங்கு உள்ள மலை கிராம மக்கள் அத்தியாவசியத் தேவைக்குக் கூட வெளியே செல்ல அவதிப்படுகிறார்கள். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், பாதிக்கப்படுபவர்களைச் சரியான நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்களை கிராமத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை டோலிகட்டி அதன் மூலமாக தான் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் சாலை அமைத்துத் தரக்கோரி பல்வேறு மனு அரசு அலுவலகங்களில் அளித்து அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதிகளை அதிகாரிகள் நேரில் வந்து பார்வை இடுவதும் இல்லை. எனவே, இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சாலை அமைத்துத் தர சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். ”ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.”