Tiruvannamalai: செய்யாறு அருகே மின் கம்பியை அகற்ற லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய மின் பொறியாளர்
செய்யாறு அருகே வீட்டின் மேல் செல்லும் மின் கம்பியை அகற்றுவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் பொறியாளரை கையும் களவுமாக பிடித்து கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்
![Tiruvannamalai: செய்யாறு அருகே மின் கம்பியை அகற்ற லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய மின் பொறியாளர் Tiruvannamalai Anti corruption cops caught an electrical engineer red handed after taking bribe to remove power line TNN Tiruvannamalai: செய்யாறு அருகே மின் கம்பியை அகற்ற லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய மின் பொறியாளர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/25/7fc916011426fbe7b90e928443d6fda91685024936109187_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் உதவி மின் பொறியாளர் வீட்டின் மேல் செல்லக்கூடிய மின் கம்பியை அகற்றி மாற்றி அமைக்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு சொந்தமான வீட்டு மனையில் மாடி வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டின் மாடியின் மீது மின்சார கம்பி செல்வதால் வீட்டினை மேற்கொண்டு கட்ட முடியாமல் சக்திவேல் தவித்துள்ளார். இதுகுறித்து மின் வாரிய அலுவலகத்தில் அதனை அகற்ற கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனால் சக்திவேல் வீட்டின் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
இந்த நிலையில் மின்சார கம்பியை அகற்றுவதற்கு வெம்பாக்கம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் சென்று புகார் செய்துள்ளார். அப்போது உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் என்பவர் மின் ஒயர் அகற்றுவதற்கு 50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் சக்திவேல் 50 ஆயிரம் பணத்தை தயார் செய்து கொண்டு பணத்தை எடுத்து கொண்டு அதிகாரியிடம் கொடுத்துள்ளார். மேலும் உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத் என்பவர் பணம் வாங்கியும் மின் கம்பியை அகற்றாமல் சக்திவேலை அலைக்கழித்துள்ளார். இது சம்பந்தமாக சக்திவேல் பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டபோது அதற்கு அவர்கள் மின் ஒயர் அகற்றுவதற்கு மேலும் 2000 ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சக்திவேல் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகனிடம் சென்றே புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை சக்திவேலிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்
அப்போது சக்திவேல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்திடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உதவி மின் பொறியாளர் அஜித் பிரசாத்தை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உதவி மீன் பொறியாளர் அஜித் பிரசாத்திடம் விசாரணை செய்து 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை தலைமையகம் மற்றும் மலவாடி அலுவலகத்தில் இரண்டு ஊழியர்களை தற்சமயம் தான் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கைது செய்து நடவடிக்கை எடுத்தார். கைது நடவடிக்கை மின்சார வாரியத்தில் தொடர்ந்து நடப்பதால் மின்சார ஊழியர்கள் மத்தியில லஞ்சம் வாங்குவதை குறித்து பதட்டமும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)