தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது விற்பனை - தி.மலை ஆட்சியர் அறிவிப்பால் அதிர்ச்சி
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அரசு டாஸ்மாக் கடையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்டம் முழுவதும் உள்ள 4 நகராட்சி, 10 பேரூராட்சி, 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 860 ஊராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் 973 தடுப்பூசி முகாம் அமைத்து 1.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் மெகா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமாரசாமி, மாவட்ட திட்ட இயக்குனர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தமிழக அரசின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுபடுத்தும் விதமாக மாவட்டத்தில் உள்ள 18 லட்சம் பேருக்கும் 100% தடுப்பூசி போடும் வகையில் இதுவரையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 43 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 57 சதவீதம் பேருக்கு வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ் கூறுகையில் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாமில் கிராமங்கள்தோறும் மருத்துவ பணியாளர்கள் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வருகின்ற ஞாயிற்று கிழமை அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்க வருபவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே மதுபாட்டில் அவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மூன்று பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி போடாத மாணவர்கள் கல்லூரிக்கு வந்தால் அந்த கல்லூரி இழுத்து மூடப்படும் என்று தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் கட்டாயம் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை மாவட்டத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
கொரோனா இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டால்தான் டாஸ்மாக் கடையில் மது வாங்க முடியும் என்ற அறிவிப்பை சமீபத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா பிறப்பித்திருந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுபோன்ற நடைமுறை அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.