திருவண்ணாமலையில் திருடுபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில், தவறவிட்ட மற்றும் திருட்டுபோன 5 லட்சம் மதிப்பிலான 20 செல்போன்களை மீட்டு, உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஒப்படைத்தார்.
![திருவண்ணாமலையில் திருடுபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு Thiruvanamalai news SP Karthikeyan recovered 20 lost and stolen cell phones worth 5 lakhs and handed them over to the rightful people TNN திருவண்ணாமலையில் திருடுபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/8e8efcb430b7f88bcf4cdb57b68caed81692268124576113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தில், தவறவிட்ட மற்றும் திருட்டுபோன 5 லட்சம் மதிப்பிலான 20 செல்போன்களை மீட்டு, உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஒப்படைத்தார். தற்போது தகவல் தொழில்நுட்பம் நமது நாட்டில் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகமாகும் அதேநேரத்தில் செல்போன்களை தவறவிடுவதும், திருட்டுபோவதும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், தொலைந்து போன மற்றும் திருட்டுபோன செல்போன்கள் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் அனைத்தும், மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மூலம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
செல்போன்களின் ஐஎம்இஐ வைத்து கண்டுபிடிப்பு
சைபர் கிரைம் துணை காவல் கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான குழுவினர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில், காணாமல் போன செல்போன்களின் ஐஎம்இஐ எனப்படும் சர்வதேச செல்போன் உற்பத்தி அடையாள எண்ணை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட செல்போனில் பயன்படுத்தப்படும் சிம்கார்டு எண், செல்போன் டவர் போன்றவற்றின் துணையுடன் காணாமல் போன செல்போன்களை கண்டறியப்படுகிறது. அதன் அடிப்படையில் சமீபத்தில் 25 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 5 லட்சம் மதிப்பிலான 20 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
அதனைத் தொடர்ந்து, செல்போன்களுக்கு உரியவர்களை நேரில் திருண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவர்களிடம் செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் வழங்கினார். அப்போது, சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், செல்போன்களுக்கு வரும் அவசியமற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் ஓடிபி எண்களையும், ரகசிய எண்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டார். அப்போது, சைபர் கிரைம் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதற்கு முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. சைபர் கிரைம் துணை காவல் கண்காணிப்பாளர் பழனி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)