பேனர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டால் அதிகாரிகள் சஸ்பெண்ட் - திருவண்ணாமலை கலெக்டர் எச்சரிக்கை
திருவண்ணாமலையில் சாலை ஓரங்களில் வைக்கப்படும் பேனர்கள் கீழே விழுந்து பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் - அதிகாரிகளுக்கு ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி நாட்களில் வெளியூர் , வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் லட்ச கணக்கில் வந்து கிரிவலம் சுற்றியும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தும் செல்கின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை நகர் பகுதிகளில் கட்சி திருமணத்திற்கும் , உயிரிழப்பு, காதனி விழா பேனர்கள் மற்றும் பல சுவர்களில் சுவரொட்டிகளும் ஒட்டி நகர் பகுதியை அசுத்தமாக்கி உள்ளனர். மேலும், வைக்கப்பட்டுள்ள பேனர்கள் திருவண்ணாமலை நகர் பகுதியில் வரக்கூடிய பொதுமக்கள் மீது விழுந்து ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வகையில் உள்ளதாலும் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் சாலை ஓரங்களில் வைக்கப்படும் பேனர்கள் சுவர்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் இன்று காலையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோட்டாட்சியர் வெற்றிவேல், நகராட்சி ஆணையர், மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில், சமீப காலமாக நகராட்சி பகுதிகளில் மற்றும் கிராம பகுதிகளில் அனுமதி பெற்று பல நாட்கள் பேனர்கள் வைக்கப்படுவதாகவும், மேலும் அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கப்படுவதாகவும் இதனை அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளை எச்சரித்தார். நகரப் பகுதிகள் மட்டுமல்லது கிராமப் பகுதிகளிலும் இது போன்ற பேனர்கள் அதிக அளவு வைக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ், இந்த பேனர்களை கண்காணிப்பதற்காக கோட்டாட்சியர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உள்ளிட்ட குழுக்கள் வைக்கப்பட்டது என்றும் இவர்கள் பேனர்களை வைத்துள்ளதை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவுறுத்தினார். மேலும் சாலை ஓரங்களில் வைக்கப்படும் பேனர்கள் விழுந்து பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் அவர்கள் மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என இந்த கூட்டத்தில் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரித்தார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில்;
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் கட்சி கட்சி திருமண பேனர்களும், கட்சி போஸ்டர்களும், கட்சி கொடி கம்பங்களும், மட்டும்தான் உள்ளது மற்றவர்களின் சுப விசேஷங்களுக்கு பேனர் வைப்பதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறச் என்றால் அனுமதி கொடுப்பதில்லை ஆனால் கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதியும் மற்றும் அனுமதி இல்லாமலும் வைக்கப்படுகின்றன அவர்களுக்கு அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்தார்