Premalatha Vijayakanth: மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
வருமான வரி சோதனைக்கு வந்த அதிகாரிகளை தாக்கிய செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பியை கைது செய்ய வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் அணை கட்டுவது என்ற நிலைபாட்டை, கடந்த பாஜக ஆட்சியிலும் எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்த்தது. இப்போது ஆட்சிக்கு வந்து காங்கிரசும், அதே நிலைபாட்டை எடுத்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது யார்?. பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து தடை ஆணையை பெற வேண்டும். யார் எதிர்த்தாலும், மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என அம்மாநில துணை முதல்வர் சிவக்குமார் தெரவித்துள்ளார். ஏற்கெனவே, தமிழகம் பாலைவளமாக இருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகம் சுடுகாடாக மாறிவிடும். தமிழக முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுத்து, மேகதாதுவில் அணை வராமல் தடுத்து, தமிழகத்தை காக்க வேண்டியது அவரது பொறுப்பு.
மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓராண்டு காலம் உள்ளது. தேமுதிக தனது பணிகளை செய்து வருகிறது. செயற்குழு, பொதுக்குழு கூட போகிறது. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து மண்டல மாநாடுகள் நடத்தப்படும். அதன்பிறகு, யாருடன் கூட்டணி என அதிகாரபூர்வமாக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுன் வியூகம் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த தேர்தல் வந்தாலும் மக்களுக்கும், நாட்டுக்கும் பயன் அளிக்கக்கூடியாக இருக்க வேண்டும். இப்போது திமுகவைச் சேர்ந்த 38 பேரும், இதற்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த 39 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். இதனால் என்ன பலனும் இல்லை. மத்தியில் ஆட்சியில் பங்கேற்று, கேபினட் அமைச்சராக இருந்தால் மட்டுமே, தமிழகத்துக்கு தேவையானதை கேட்டு பெற முடியும். இதனை மக்கள் புரிந்துகொண்டு மாற்றத்தை கொடுத்தால், தமிழகத்துக்கு வேண்டியதை மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற முடியும். யார்? ஆட்சி அமைக்க போகிறார்கள் என தெரியவில்லை. இந்தமுறை, தமிழகத்துக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியான உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது குறித்து, அந்நிறுவனம் விளக்கமளிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு ரொம்ப மோசமாக உள்ளது. கள்ளச்சாராயம், படுகொலைகள், நகை பறிப்பு, பாலியல் வன்கொடுமை ஒருபுறம் இருக்க, சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கப்பட்டதை கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கக்கூடியது. அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடமையை செய்யும் அதிகாரிகளை தாக்கக்கூடாது. மணல் கடத்தலை தடுத்த விஏஓ படுகொலை, துறையூரில் வட்டாட்சியர் மீது தாக்குதல் என்பதுதான் திராவிட மாடல் அரசு. கடமையை செய்யவிடாமல் அதிகாரிகளை அரசு தடுக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரரை கைது செய்ய வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. பேசுவதிலும், நடப்பதிலும் தடுமாற்றம் உள்ளது. மக்களையும், தொண்டர்களையும் விரைவாக சந்திப்பார்” தெரிவித்தார்.