மாடவீதியில் அமைக்கப்படும் சிமெண்ட் சாலை.. திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றமா? ஆட்சியர் ஆய்வு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சுற்றிலும் உள்ள மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைப்பதால் போக்குவரத்து மாற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் எ.வ.வேலு வெற்றி பெற்றால் மாடவீதி சுற்றிலும் சிமெண்ட் சாலை அமைப்பதாக தெரிவித்திருந்தார். அதற்காக சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜையை அமைச்சர் போட்டார். அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் மாட வீதியில் முதற்கட்டமாக கோபுரம் பகுதி மற்றும் பெரிய தெருவில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2021-22-யின் கீழ் ரூபாய் 15 கோடி மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியில் பக்க கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் திருவூடல் தெரு- பேகோபுரத் தெரு சந்திப்பு (திரவுபதி அம்மன் கோவில்) முதல் வட ஒத்தவாடைத் தெரு வரையில் உள்ள சாலையில் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி முதல் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
சிமெண்டு சாலை அமைக்கும் பணியையொட்டி பே கோபுரத் தெரு, பெரிய தெரு மூடப்பட்டு இப்பணி முடியும் வரை அப்பகுதி சாலை மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டவுள்ளது. அதன்படி மணலூர்பேட்டை மற்றும் தண்டராம்பட்டு சாலை வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சிலையில் இருந்து கல்நகர், ஆடுதொட்டித் தெரு, காந்தி நகர் பைபாஸ் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கும், பேகோபுரத் தெரு வழியாக நகரின் உள்ளே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காமராஜர் சிலையில் இருந்து கல்நகர், ஆடுதொட்டித் தெரு, காந்தி நகர் பைபாஸ் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கும், தேரடி தெருவில் இருந்து நகருக்கு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காந்தி சிலை, பூத நாராயண பெருமாள் கோவில், சின்னக்கடைத் தெரு வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கும், செங்கம் சாலையில் இருந்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் செங்கம் சாலை சந்திப்பில் இருந்து கிரிவலப்பாதை வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதனைத்தொடர்ந்து இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் திருவூடல் தெரு- பேகோபுரத் தெரு சந்திப்பு, கல்நகர், ஆடுதொட்டி தெரு, திருகோவிலூர் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் சிமெண்டு சாலை போடும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அதற்கு அதிகாரிகள், சிமெண்டு சாலையானது 100 மீட்டர், 100 மீட்டராக அமைக்கப்படள்ளது.இந்த சாலை அமைக்கும் பணிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தனர். பொதுமக்களுக்கு இடையூறு இன்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு முறையாக கடைபிடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினர். மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ள பகுதிகளில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றவும் உத்தரவிட்டார்.