அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்.. 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ் - கும்பல் சிக்கியது எப்படி?
வேலூர் அடுக்காம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிறந்து மூன்று நாளான ஆண் குழந்தை கடத்திய விவகாரத்தில், குழந்தையை கடத்தி சென்ற பெண்ணின் சிசிடிவி காட்சி வெளியானது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் வயது (24). இவரது மனைவி சின்னு வயது (20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சின்னு தலைப்பிரசவத்திற்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர் பிரசவ வார்டில் இருந்து குழந்தைகள் நலவார்டிற்கு மாற்றப்பட்டார். அங்கு தாய் சேய் இருவரும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர். இந்த நிலையில் கோவிந்தன் தனது மனைவிக்கு நேற்று காலை 8 மணி அளவில் உணவு வாங்கி கொடுத்து விட்டு சென்றுள்ளார். சின்னு உணவு அருந்தி கொண்டிருந்தபோது குழந்தை அழுதுள்ளது. அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ சாப்பிடு என்று கூறி குழந்தையை வாங்கிக் கொண்டார். சிறிது நேரத்தில் அந்தப் பெண் குழந்தையுடன் மாயமாகியுள்ளார்.
கட்ட பையில் குழந்தையை கடத்திய பெண்
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னு அந்த வார்டு முழுவதும் தேடிப் பார்த்தார். ஆனால் அந்தப் பெண்ணை காணவில்லை. இதனால் குழந்தை கடத்தப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து வேலூர் தாலுக்கா காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நீல நிற புடவை கட்டிய பெண் ஒருவர் சுமார் 10 வயது உள்ள சிறுவனுடன் அந்த வார்டில் நடமாடி வருகிறார். இரண்டு குழந்தைகளை அவர் கொஞ்சி உள்ளார். பின்னர் சின்னுவின் குழந்தை மற்றும் தன்னுடன் வந்த சிறுவனுடன் அந்தப் பெண் அவசரமாக வெளியே செல்கிறார். வெளியே செல்லும்போது அந்தப் பெண் ஒரு பையுடன் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்தப் பையில் குழந்தையுடன் அவர் சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
குழந்தையை கடத்திய நான்கு பேர் கைது
இந்த விவகாரத்தில், 2 துணை கவல்கணிப்பாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் பணி நடந்தது. 24 மணி நேரத்திற்குள் ஆண் குழந்தையை வேலூர் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். குழந்தையை கடத்தியச் சென்ற வேலூர் அடுத்த இடையன்சாத்து பகுதியை சேர்ந்த ஜெயந்திமாலா வயது (38) என்பவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்து. இதில் ஜெயந்தி மாலா குழந்தையை கடத்தி கட்டை பையில் வைத்துக்கொண்டு அசாதாரணமாக எதுவும் நடக்காதது போல் துணி பையை எடுத்துக்கொண்டு செல்வது போல் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது. ஜெயந்திமாலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பெங்களூரில் ஒருவருக்கு விற்பனை செய்ததாகவும் தெரிவித்த நிலையில், பெங்களூருக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அங்கு குழந்தையை மீட்டனர். இதில் ஜெயந்திமாலா உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்தி கட்டைபையில் வைத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.