அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் நடைபெறும் லஞ்ச ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கு குறித்து ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி விரைவில் திமுக அரசு கலைக்கப்படும் - முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்க செய்ய வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகவும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி கண்டன உரையாற்றினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்;
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் எனவும், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை பதிவி நீக்கம் செய்யவும், தமிழகத்தில் சட்டஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், கலைஞரின் மகன் முக ஸ்டாலின் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை இதனால் தமிழகத்தில் நல்ல ஆட்சி நடத்தாததால் தமிழகத்தில் கொலை,கொள்ளை, போதை பொருள் விற்பனை போன்றவை நடப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திகிறோம். முன்னாள் அமைச்சர்கள் மீது, அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது பல்வேறு இடங்களில் காவல்துறையினர் மூலமாக இவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. திமுகவில் உள்ள அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறையினர் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சார துறை மற்றும் டாஸ்மாக் துறை பாலாஜியின் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் கைது செய்யபட்டு நெஞ்சுவலி என்ற நாடகத்தின் மூலமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

ஆறு அமாவாசைக்குள் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்றும், தமிழகத்தில் நடைபெறும் அத்தனை லஞ்ச ஊழல் சட்ட ஒழுங்கு பிரச்சனை அனைத்தையும் கவர்னர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் விரைவில் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி சட்ட பிரிவு 356 ஐ பயன்படுத்தி திமுக அரசை விரைவில் கலைக்கப்பட உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்பார் எடப்பாடியார் தலைமையில் மாபெரும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிப்போம் என தெரிவித்தார். இதற்கு முன்னதாக அதிமுகவின் முன்னாள் மாவட்ட கழக செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான பெருமாள் நகர் ராஜன் தலைமையில் கிரிவல பாதையில் இருந்து 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணையாக சென்றனர். அண்ணா நுழைவாயில் வேலூர் நெடுஞ்சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் தனி அணியாக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களுக்கு தனது அலுவலகத்தில் சிக்கன் பிரியாணி வழங்கினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





















