அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடையே தாக்குதல்...திருவண்ணாமலையில் அதிர்ச்சி... வைரலான வீடியோ!
திருவண்ணாமலை செங்கம் சாலையில் அமைந்துள்ள சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு முன்பாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை நகராட்சி, செங்கம் செல்லக்கூடிய சாலையில் சண்முகா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் நிகழ்வதாகக் கூறப்படும் நிலையில், இந்த வாக்குவாதம் இதுவரையில் சண்டையில் முடிந்தது இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முன்விரோத காரணமாக மாணவர்கள் இருதரப்பினருக்கு இடையே வகுப்பறைக்குள்ளே தாக்குதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து திங்கள் கிழமை (ஜூலை.25) மாலை பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவர்கள் இரு தரப்பினர் மீண்டும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கித் தொடங்கிய நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்தத் தாக்குதலில் வெளி நபர்களும் ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த அங்கு நகரக் காவல் துறையினர் வந்ததை அறிந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தொடர்ந்து நகரக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையான செங்கம் சாலையில் பள்ளிக்கு அருகாமையிலேயே மாணவர்கள் சாலையில் வரும் தனியார் பள்ளி பேருந்து, பொதுமக்களின் இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை நிறுத்தி தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்பாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரல்@SRajaJourno @abpnadu@Anbil_Mahesh pic.twitter.com/JfNgoJXSz9
— Vinoth (@Vinoth05503970) July 27, 2022
இந்நிலையில் இன்று (ஜூலை.27) சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் சென்று பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பெற்றோரிடம் பேசிய காவல் துறையினர், பள்ளி மாணவர்கள் வீட்டுக்கு வந்த பின்பு எங்கே செல்கிறார்கள், தினந்தோறும் மாணவர்கள் வீட்டில் படிக்கிறார்களா,பிள்ளைகள் சரியான முறையில் தினந்தோறும் பள்ளிக்கு செல்கிறார்களா அல்லது பள்ளிக்கு செல்லாமல் வேறு எங்காவது செல்கின்றார்களா எனக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.