(Source: ECI/ABP News/ABP Majha)
திருச்சி அருகே பிரம்மாண்டமாக தயாராகி வரும் விசிக வெல்லும் சனநாயகம் மாநாடு பந்தல்
இந்த மாநாட்டிற்காக திருச்சி அருகே உள்ள சிறுகனூரில் 50 ஏக்கர் பரப்பளவிலுள்ள 500 மீ அகலம்- 1000மீ நீளத்திற்கு மாநாடு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திருச்சி மாவட்டம், சிறுகனூரில், ஜனவரி 26ம் தேதி நாளை நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்காக பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இந்த மாநாட்டிற்காக திருச்சி அருகே உள்ள சிறுகனூரில் 50 ஏக்கர் பரப்பளவிலுள்ள 500 மீ அகலம்- 1000மீ நீளத்திற்கு மாநாடு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு திடலின் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் என நெடுஞ்சாலையின் இரண்டு புறங்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தும் வகையில் இடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் திடலின் பின்புறம், பக்கங்களில் முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுக்காக வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர்/அரசமைப்பு வடிவில் திடல் வடிவமைப்பு
மாநாடு திடலின் பிரதான நுழைவு வாயில் முந்தைய நாடாளுமன்ற கட்டிட வடிவிலும், இருபுறமும் உள்ள பக்க வாயில்கள் அம்பேத்கரின் நினைவிட வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாயில்களில் திருமாவளவன், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோருடன் புத்தர் இடம்பெற்றுள்ளார். நுழைவு வாயிலைத் தொடர்ந்து உள்ளே நுழையும் தொண்டர்களை பிரம்மாண்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசமைப்பின் முகவுரையும், அம்பேத்கரின் சிலையும் வரவேற்கும் வகையில் அமைக்கபட்டுள்ளது. மேலும், தலைவர்கள் உரையாற்றும் மேடை நாடாளுமன்ற கட்டிட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 80 அடி நீளத்திலும் 50 அடி உயரத்திலும் மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாடு நடைபெறும் இடத்தில் தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி திருநாவுக்கரசர், மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகேயன், ஆகியோர் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகளை விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனின் தனிசெயலாளர் தயாளன் ஆகியோர் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை தர உள்ளதால், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநாட்டு பாதுகாப்பு பணிகளை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கு பெற உள்ளதால் இப்பகுதியில் எந்தவிதமான ஒரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதே சமயம் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் திருச்சி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களையும் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று திருச்சி மாநகரிலிருந்து சென்னையை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.