‘இரவு, காடு, ரெய்டு’ பிடிபட்ட கள்ள சாராயம்.. திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் அதிரடி..!
நேற்று இரவு சக போலீசாரோடு திடீர் ரெய்டுக்கு சென்ற வருண்குமார் ஐபிஎஸ், சிலையூர் வன்னாடு காட்டு பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க வைத்திருந்த 1200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.
திருச்சி மாவட்ட எஸ்.பியாக வருண்குமார் ஐ.பி.எஸ் பொறுப்பேற்றதும் அவர் செய்த முதல் வேலை, பொதுமக்கள் நேரடியாக எஸ்.பி-யை தொடர்புகொண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிவித்ததுதான்.
அதன்பிறகு இரவு, பகல் என பாரது வந்த அழைப்புகளை ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் வருண்குமார். இந்நிலையில், அவரை தொடர்புகொண்ட பொதுமக்கள் சிலர் துறையூர் பச்சமலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக புகார் அளித்திருந்தார். அதனை விசாரிக்க சொல்லி மதுவிலக்கு போலீசாருக்கு உத்தரவிட்டதோடு, தகவல் உறுதி செய்யப்பட்டபின் அவரே களத்தில் இறங்கி கள்ளச்சாராய ஊறலை பிடித்ததை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.
நேற்று இரவு சக போலீசாரோடு திடீர் ரெய்டுக்கு சென்ற வருண்குமார் ஐபிஎஸ், சிலையூர் வன்னாடு காட்டு பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க வைத்திருந்த 1200 லிட்டர் சாராய ஊறல், அருகாமை கிராமங்களான கிணத்தூர், நொச்சிக்குளம், புதூர், தண்ணீர் பள்ளம், சின்ன வல்லம், ராமநாதபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 8 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினார்.
அதேபோல், பச்சமலை பகுதியை நேரடியாக ஆய்வு செய்த எஸ்.பி. வருண்குமார், பொதுமக்கள் எந்த வித தயக்கமும் அச்சமும் கொள்ளாமல் சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
திருச்சி எஸ்.பி.யாக வருண்குமார் பொறுப்பேற்ற பிறகு கள்ளச்சாராய விற்பனை, விபச்சாரம் உள்ளிட்ட முறைகேடான வழக்குகளில் எடுத்த கடும் நடவடிக்கைகளால் பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளனர். அதோடு, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், கந்துவட்டி தொழில் நடத்தும் தாதாக்களும் எஸ்.பி. வருண்குமார் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அஞ்சி பொதுமக்களை தொந்தரவு செய்யாமல் தற்போது அமைதியாக இருப்பதாகவும் திருச்சி மாவட்ட மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.