Urban Local Body Election | திருச்சி மாநகராட்சியில் 51 வார்டுகளில் திமுக, அதிமுக நேரடி போட்டி
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் திமுக சார்பாக 51 வார்டுகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமைக்கழகம் வெளியிட்டது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் 51 வார்டுகளில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்காக திருச்சி மாநகரில் 238 இடங்களில் 859 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஐனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4 ஆம் தேதி வரை விடுமுறை இல்லாத நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், நேற்று முன் தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது. இதன்படி, திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி தேர்தலில் திமுக- கூட்டணி கட்சிகளுகிடையே இடபங்கீடு பேச்சு வார்த்தை இழுபறியில் இருந்து வந்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கேட்டதால் தொடர் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக திமுக சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட தாமதம் ஏற்பட்டதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுகிடையே பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் நேற்று திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் திமுக சார்பாக 51 வார்டுகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமைக்கழகம் வெளியிட்டது. இந்த வேட்பாளர்கள் பட்டியலில் முன்னால் துணை மேயர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பகுதி, வட்டம் செயலாளர்கள் என அனைவருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 14 வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கபட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் 4 வார்டுகளும், இரண்டு கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, கட்சிகளுக்கு தலா 2 வார்டுகளும், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தலா 1 வார்டுகளும் ஒதுக்கபட உள்ளது.
திருச்சி மாநகராட்சி தேர்தலில் அதிமுக - திமுக நேரடியாக 51 இடங்களில் போட்டியிடுகிறது. இதனால் திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதேபோன்று வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி மேயர் பதவியில் அமர்வதற்காக திமுக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதேசமயம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை முழுமையாக தோல்வி அடைந்தது. ஆகையால் மீண்டும் திருச்சியில் மேயர் பதவியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 65 வார்டுகளிலும் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. இதனால் திருச்சி மாநகராட்சியில் அடுத்த மேயர் யார்? அதிமுக- திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.