திருச்சி வண்ணாங்கோவில் அருகே தார் உற்பத்தி ஆலையை மூட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
திருச்சி வண்ணாங்கோவில் அருகே தார் உற்பத்தி ஆலையை மூட வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
திருச்சி வண்ணாங்கோவில் அருகே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனியார் தார் உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தார் உற்பத்தி ஆலையில் அவ்வபோது மிகவும் கடுமையான புகை மூட்டத்துடன் கரும்புகை வெளி வருகிறது.இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி சுவாசக் கோளாறுகள் ஏற்படுவது உடன் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக வண்ணாங் கோயில் திருநகர் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதில் 3 பேருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் தனியார் ஆலையை மூடவேண்டும் என புகார் மனு அளித்தனர். மேலும் இதுக்குறித்து மக்கள் கூறுகையில் இந்த தனியார் ஆலையில் தார் உற்பத்தி செய்ய தொடங்கியபோதே அங்கு இருந்து வெளிவரும் புகையால் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் மிகவும் பாதிக்கபட்டனர். உடனே நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிகையும் எடுக்கவில்லை, கடந்த சில மாதங்களாக பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் பல தொற்று நோய்களால் பாதிக்கபட்டு வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு அந்த நச்சுபுகையை சுவாசிப்பதால், மூச்சுதிணறல் ஏற்படுகிறது. எனவே மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதால் உடனடியாக தார் ஆலையை மூட வேண்டும். ஒவ்வொரு நாளும் மக்கள் உயிர் பயத்துடன் வாழ்கையை கழித்து வருகிறார்கள். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை, என்றால் மக்கள் ஒன்று கூடி பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிடபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்