திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.12¾ லட்சம் அபராதம் விதிப்பு
திருச்சி மாநகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.12 ¾ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. 1,331 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து வீதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களை கண்டறிந்து அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின் கீழ் நடைவடிக்கை மேற்கொள்ள திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். அதன் படி திருச்சி மாநகரில் 44 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த 804 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.8 லட்சத்து 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த 108 பேர்கள் மீது ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிவேகமாக அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி வந்த 9 பேர்கள் மீது ரூ.9 ஆயிரமும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி சென்ற 49 பேர்களுக்கு ரூ.49 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள் 7 பேர்களுக்கு ரூ.35 ஆயிரமும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர்கள் சென்றதில் 72 வழக்குகள் பதிவு செய்து ரூ.72 ஆயிரமும் மற்றும் இதர வாகன விதிமீறல்களில் 266 வழக்குகளுக்கு ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. நேற்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து விதியை மீறிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டிய 1,331 பேர்கள் மீது 1,331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக ரூ.12 லட்சத்து 99 ஆயிரம் வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தோப்பு கரணம் போட சொல்லி போலீசார் நூதன தண்டனை வழங்கினர். இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், திருச்சி மாநகரை பொறுத்தவரை தொடர்ந்து பல இடங்களில் விபத்துகள் நடைபெற்று வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றாததே இது போன்ற விபத்துகள் நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகையால் மாநகரில் பல இடங்களில் பொதுமக்களுக்கு விதிமுறைகளை பற்றி பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் அதை சரியாக பின்பற்றவில்லை. ஆகையால் தான் இந்த அதிரடி வாகன சோதனை நடத்தபட்டது. மேலும் இதுபோன்று வாகன சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்