ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன..?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் உடல் குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் தனியாக ஒரு வளாகம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவது வழக்கம். இதன்படி, இங்கு இதுவரை, சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் சுமார் 75 பேர் உள்பட நைஜீரியா, பல்கேரியா, வங்கதேசம், இந்தோனேசியா நாட்டினர் என்று சுமார் 130 வெளிநாட்டினர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கி உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். இங்கு தங்கி இருக்கும் வெளிநாட்டினருக்கு தமிழக அரசு சார்பில் தினசரி உணவுப்படியாக ரூ.175 வழங்கப்படுகிறது. சிறப்பு முகாமிற்குள் சமைத்து உண்ணும் வசதி, வெளியில் இருந்து தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவு வகைகளை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த நிலையில் தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் இருந்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் இருந்தும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு கடந்த வாரம் அழைத்து வரப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் காவல்துறையினர் 3 அடுக்கு பாதுகாப்பு அமைத்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு இந்த 4 பேரும் எங்களையும் சக மனிதர்கள் போல் நடத்தவேண்டும் என கூறி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். பின்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும்படி கூறினார். இதனை தொடர்ந்து நளினி இந்த 4 பேர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் உடல் குறைவு காரணமாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் தகவல் தெரிவிக்கையில், ஜெயகுமாருக்கு மூச்சு திணறல் காரணமாக தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவமனையில் ஜெயகுமார் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்களோ அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிப்பதா, இல்லை முகாமிற்கு அழைத்து செல்வதா என தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். .
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்