திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையும் இடத்தை சீர் செய்யும் பணிகள் தீவிரம்
100 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய திட்டத்திற்காக, 460 கோடி ரூபாய் முதற்கட்ட மதிப்பீடாக அறிவிக்கப்பட்டு உள்ளது
தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள திருச்சியில் இருந்து மாநிலத்தின் எந்தவொரு பகுதிக்கும் போக்குவரத்து வசதி உள்ளதால், சில மணி நேரங்களில் சென்றுவிடலாம். இதனால், திருச்சி மத்திய பேருந்து நிலையம் வழியாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், தனியார் பேருந்துகள் என தினமும் 2,500-க்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக, மாநகரிலும், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்பகுதி சாலைகளிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று 1996-ம் ஆண்டு முதலே அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், திருச்சி யில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் தமிழ்நாடு நகர்ப்புற நிதி, உட்கட் டமைப்பு மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதன்மூலம் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்ற திருச்சி மக்களின் 25 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு திருச்சி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் வணிக வளாகங்கள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன நிறுத்தங்கள், தேவையான அளவிற்கு பேருந்து பாதைகள் மட்டுமல்லாது, எரிபொருள் நிலையம், குளிர்சாதன பொருட்கள் கிட்டங்கி வசதியுடன் கூடிய சரக்கு முனையமும் அமைக்கப்பட உள்ளது எனவும், திருச்சி மக்கள் தொகை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை 11.45 சதவீதம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் வரையறுக்கப்பட்டு உள்ளது. பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைய உள்ள நிலையில், அங்கு காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், அஞ்சல் நிலையம் உள்ளிட்ட சேவை நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. 100 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய திட்டத்திற்காக, 460 கோடி ரூபாய் முதற்கட்ட மதிப்பீடாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் மிக அதிக மதிப்பிலான திட்டம் இது ஆகும். இந்த பேருந்து முனைய பணிகளை சிறந்த முறையில் நிறைவேற்றும் வகையிலான பணிகளை மேற்கொண்டு இருப்பதாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து, ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், பேருந்து நிலையம் அமையவுள்ளதாக கூறப்படும் பஞ்சப்பூர் பகுதியில் செடிகள், முட் புதர்களை அகற்றும் பணியும், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் உள்ள கைவிடப்பட்ட கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளை இடித்து அந்த இடத்தை சமன்படுத்தும் பணியும் கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, மாநகராட்சி அலுவலர்கள் கூறும்போது, ஒருங் கிணைந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை சுத்தப் படுத்தி, சமன்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது பேருந்து நிலையத்துக்கான இடத்தை எளிமையாக பார்வையிடும் நோக்கில் இந்தப்பணி மேற்கொள் ளப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.