திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் எப்போது திறப்பு? - அதிகாரிகள் கூறிய தகவல்
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் முதல் கட்ட சோதனை ஓட்டம், வெற்றிகரமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தகவல்
திருச்சியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
தமிழ்நாட்டின் மையப்பகுதியாக திகழக்கூடியது திருச்சி ஆகும். திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கமும், வாகனங்களின் பெருக்கமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. அதே சமயம் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. இவற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் திருச்சி மாநகரைப் பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் என்பது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் பகுதி, மத்திய பேருந்து நிலையம் சுற்றி உள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது கட்டுக்கடங்காமல் ஏற்படுகிறது. ஆகையால் இவற்றிற்கு தீர்வு காண வேண்டுமென மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவும் பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்தினர்.
இத்திட்ட முழுமையாக முடிவடைந்தால் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பதே இருக்காது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திட்டம் முழுமைபெற்றால் சென்னைக்கு நிகரான மாநகரமாக திருச்சி திகழும் என்பதில் சந்தேகம் இல்லை என்றனர்.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்
இதனை தொடர்ந்து திருச்சியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய பஞ்சப்பூர் என்ற பகுதியில் சுமார் 243.78 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணியும், பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம், 106.20 கோடி ரூபாயில் கனரக சரக்கு வாகனம் முனையம் மற்றும் சாலைகள் மேம்படுத்துதல், பறக்கும் சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என மொத்தம் அனைத்து பணிகளுக்கும் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் சுமார் 40.60 ஏக்கர் மொத்த பரப்பளவில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை வாரம்தோறும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். தரமானதாக இருக்க வேண்டும் குறைகள் சொல்லும் அளவிற்கு பணிகள் நடைபெறக்கூடாது அறிவுரை வழங்கி வந்தனர்.
இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் 124 புறநகர் பேருந்துகளை நிறுத்தும் வகையிலும், 142 நீண்ட நேர பேருந்துகளை நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் 78 குறைந்த நேர நிறுத்த தடங்கள் என மொத்தம் சேர்த்து 404 பேருந்து நிறுத்தம் தடங்கள் அமைக்கபட்டுள்ளது. மேலும் 60 நகர பேருந்து நிறுத்த இடங்களும், 70 கடைகள் என பிரம்மாண்டமாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் சோதனை ஓட்டம்
குறிப்பாக பஞ்சப்பூர் பேருந்து முனையம் ஆனது இரண்டு அடுக்குகளை கொண்டது போல் கட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் முதல் தளம் அமைக்கும் பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் புகைப்படங்கள் அனைத்து சமூக வலைதளங்களும் வைரலாகி வந்தது.
மேலும் பேருந்து முனையத்தில் தற்போது 85 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் பேருந்து முனையத்தை இரண்டு பகுதிகளாக திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை போல் இல்லாமல், பணிகள் அனைத்தையும் முழுமையாக முடித்த பின்னர் திறக்க வேண்டும் என கூறியதாக அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் பணிகள் அனைத்தையும், தரமாகவும், உறுதியாகவும் விரைந்து முடிப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒரு தனியார் பேருந்து வைத்து சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் நடத்தியுள்ளனர். இந்த புகைபடமும் சமூக வலையதலங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்தாண்டு திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கபடும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.