திருச்சி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு - புத்தாண்டில் சோகம்
புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் உற்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் ரயில் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரின் தாயார் சாந்தி (வயது 63). அதேபோல், மாரிமுத்துக்கு விஜயலட்சுமி (36) என்ற மனைவியும், பிரதீபா (9), ஹரிணி (7) என்ற இரு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீடு 1972 - ம் ஆண்டு கட்டப்பட்ட சுண்ணாம்பு கட்டடமாகும். பழைய வீடு என்பதால், மேற்கூரையும், சுவர்களும் வலுவில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வசிக்கும் மாரிமுத்துவின் தங்கை திடீரென இறந்து விட்டதால், மாரிமுத்து சென்னைக்கு சென்று விட்டார். இந்த நிலையில், இன்று அதிகாலை மாரிமுத்து குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் அனைவரும் இடிப்பாடுகளில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் காவல் நிலைய போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவர்கள் மீட்பு பணி தோல்வியில் முடிந்தது. இடிபாடுகளில் சிக்கிய சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து கிடந்ததை பார்த்ததும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களும், அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்பு சில மணி நேரங்களுக்கு பிறகு இடுபாடுகளில் சிக்கி இறந்த அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.