மதிமுகவினருடன் மோதல் வழக்கில் சீமான் விடுதலை - திருச்சி நீதிமன்றம் உத்தரவு
மதிமுகவினருடன் மோதல் வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு ஒரே விமானத்தில் திருச்சிக்கு வந்தனர். அப்போது விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த இருகட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து மதிமுகவினர் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-6 கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சிவகுமார் நேற்று தீர்ப்பு கூறினார். இதில், இந்த வழக்கில் இருந்து சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 14 பேரை விடுவித்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்த வழக்கு, அடுத்த மாதம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இதையொட்டி நேற்று கோர்ட்டில் ஆஜரான சீமான், தீர்ப்பிற்கு பின்னர் கோர்ட்டிற்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:- சலுகைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஏற்கக்கூடாது. சலுகை, மானியம், போனஸ், இலவசம் இவற்றால் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?. இதுபோன்ற அறிவிப்புகள் ஓட்டுகளை கவருவதற்கான திட்டங்கள் ஆகும். இலவசங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் பா.ஜ.க., ஏன் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்குகிறது.
தமிழகத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் நிலையில் உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இளைஞர். தற்போதுதான் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். போகப் போகத்தான் அவரின் திறமை வெளிப்படும். உதயநிதியின் பட நிறுவனம் உரிய தொகை கொடுத்து படத்தை வாங்குகிறார்கள். முறையான கணக்கு காட்டுகிறார்கள். நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பர படத்தில் நடித்துள்ளது தவறு. ஆன்லைன் ரம்மியை தடை செய்வது, டாஸ்மாக் கடையை மூடுவது மற்றும் எட்டு வழிச்சாலை அமைப்பது தொடர்பாக முதல்-அமைச்சரின் கருத்தை முதலில் தெரிவிக்க வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்