53 ஆண்டு சேவை நிறைவு! திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை நம்பியிருந்த வியாபாரிகள், தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாகும்?
திருச்சியில் பகல், இரவு என்று 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய மத்திய பேருந்து நிலையம் 53 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் வெளியூர் போக்குவரத்து சேவையை நிறுத்திக்கொள்கிறது.

திருச்சி: 53 ஆண்டுகள் நெடிய சேவை... இன்றுடன் ஓய்வு பெற்றது திருச்சி மத்திய பேருந்து நிலையம். ஆனால் இந்த பேருந்து நிலையத்தை நம்பி இத்தனை ஆண்டுகளாக பஸ்ஸ்டாண்ட் உள்ளேயும், வெளியேயும் கடைகளும், தள்ளுவண்டிகளும் அமைத்திருந்த வியாபாரிகள் அவர்களை நம்பியிருந்த தொழிலாளர்கள் நிலைதான் பரிதாபகரமாக மாறியுள்ளது.
திருச்சியில் பகல், இரவு என்று 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய மத்திய பேருந்து நிலையம் 53 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் வெளியூர் போக்குவரத்து சேவையை நிறுத்திக்கொள்கிறது. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் பிரதான அடையாளமாக திகழ்ந்தது மத்திய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்துக்கு, சென்னை, மதுரை, விழுப்புரம், தஞ்சாவூர், நாகை, கும்பகோணம், மயிலாடுதுறை, ஈரோடு, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், பழனி உள்ளிட்ட நகரங்களில் இருந்து நாள்தோறும் 1,516 புறநகர் பேருந்துகள் 2,893 முறை வந்து சென்றன.

இப்பேருந்து நிலையத்தில் இருந்து 750 மீ. தொலைவில் திருச்சி ரயில்வே சந்திப்பும், 5 கி.மீ. தொலைவில் திருச்சி சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளது சிறப்புக்குரியது. இதனால், 24 மணிநேரமும் பரபரப்பாக இயங்கி வந்தது திருச்சி மத்திய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் சுமார் ஒரு லட்சம் பயணிகள் வந்து சென்றனர் என்றால் மிகையில்லை.
1966-ம் ஆண்டு நகராட்சித் தலைவராக ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி பிள்ளை பதவியில் இருந்தபோது, மத்திய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் 1972-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வராக இருந்த பக்வத்சலம் இந்த மத்திய பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார். இதனால், மத்திய பேருந்து நிலையம் ‘ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி பிள்ளை பேருந்து நிலையம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான் காலத்தில், மத்திய பேருந்து நிலையம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது 4.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள மத்திய பேருந்து நிலையம் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மத்திய பேருந்து நிலையத்திற்கு சுற்றுப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வந்து செல்வர். இவர்களை நம்பி தள்ளுவண்டி உணவகங்கள், பழக்கடைகள், ஆட்டோக்கள், சிறிய ஜவுளிக்கடைகள், பெட்டிக்கடைகள், ஜூஸ் கடைகள் பஸ்ஸ்டாண்டை சுற்றி அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பேருந்து நிலையத்திற்குள் 2 உணவகங்கள், சிறிய அளவிலான கடைகள் என்று பல கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளை நம்பி இதில் வேலை பார்த்தவர்கள் நூற்றுக்கணக்கானோர். மேலும் கடலை, பட்டாணி உட்பட பஸ்களில் வரும் பயணிகளிடம் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் என்று இந்த பேருந்து நிலையத்தை நம்பி ஏராளமானோர் தங்களின் குடும்பத்தை ஓட்டி வந்தனர்.
இத்தகைய சிறப்புமிக்க 53 ஆண்டுகள் பழமையான மத்திய பேருந்து நிலையம் இன்றுடன் (ஜூலை 16) தனது வெளியூர் பேருந்துகள் இயக்க சேவையை நிறுத்திக்கொள்கிறது. வெளியூர் பேருந்துகள் இங்கு வந்து செல்லுமே தவிர, இனிமேல் நகரப் பேருந்துகள் மட்டுமே இங்கிருந்து இயக்கப்பட உள்ளன. இதனால் பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து விடும். இதனால் இங்கு கடை வைத்துள்ளவர்கள் நிலை பரிதாபமாக மாறி உள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து சென்ற இந்த இடம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
மத்திய பேருந்து நிலையம் அமைவதற்கு முன்பு, அந்த இடம் மைதானமாக இருந்தது. அங்கு சுந்தரம் டிரான்ஸ்போர்ட் பேருந்துகள் நின்றன. சுந்தரம் பேருந்து நிலைய ஊழியர்கள் இந்த மைதானத்தில் ஒருமாதம் தொடர்ந்து நடத்திய போராட்டம் அப்போது பேசுப்பொருளானது. மேலும், மத்திய பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்பே தற்போது உள்ள பெரியார் சிலை அங்கு திறக்கப்பட்டது. தற்போது உள்ள மத்திய பேருந்து நிலைய பகுதியில் வணிக வளாகங்கள், மால்கள், உள் விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் உள்ளடக்கிய ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வர மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.
பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு வருவதன் மூலம் எதிர்காலத்தில் திருச்சி மக்கள் பொழுதுபோக்குவதற்கான சிறந்த இடமாக மத்திய பேருந்து நிலையம் மாறும் என தெரிய வருகிறது. இருப்பினும் இந்த மத்திய பேருந்து நிலையத்தை நம்பியிருந்த சிறு வியாபாரிகள், அவர்களிடம் வேலை செய்தவர்கள் என பலரின் குடும்ப நிலை மிகவும் அதளபாதாளத்திற்கு சென்று விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.





















